வாழ்க்கை வாழ்வதற்கே! கவலைகள் யாவும் வீழ்வதற்கே!!
நம் மனதில் தினந்தோறும் புதிது புதிதாக கவலைகள் தோன்றுவதற்கு முக்கிய காரணம் பிறர் வாழ்க்கையை நம் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்ப்பதுதான். நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு எல்லா வசதிகளும் உள்ளன. நமக்கு அப்படி ஒரு வசதி கிடைக்கவில்லையே எனக் கவலைப்படுபவர்கள் ஏராளம். இப்படி கவலைப்படுவதை விட்டு விட்டு அவர்களுக்கு இருக்கும் வசதிகளை நினைத்து மகிழ்ச்சி அடையப் பாருங்கள். அவருக்கு எப்படி அவ்வளவு வசதிகள் கிடைத்தன என்பதை சற்று யோசித்துப் பாருங்கள். நீங்களும் அத்தகைய வசதிகயை அடைய முயற்சி செய்யுங்கள்.
பறவைகளைப் பாருங்கள். சுதந்திரமாய் மகிழ்ச்சியாய் வானில் பறந்து திரிகின்றன. பறவைகளுக்கும் நம்மைப் போலவே உணர்வுகள் உண்டு. ஒரு பறவை தன்னைச் சுற்றியுள்ள எல்லா பறவைகளையும் தன்னைப்போல அவை ஒரு பறவை என்று எண்ணுகிறது. மகிழ்ச்சியாய் திரிகிறது.
கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது என்று சற்று யோசித்துப் பாருங்கள். இதனால் உங்களுக்கு பரிசாகக் கிடைப்பது மனஉளைச்சலும் அதற்கு போனசாகக் கிடைப்பது இரத்தக்கொதிப்பும் இதய நோயும் மட்டுமே.
கவலைக்கான முக்கியமான காரணிகள் என்னென்ன என்பதை இப்போது நாம் சற்று பட்டியலிட்டுப் பார்ப்போம்.
- தேவைக்கு அதிகமாக ஆசைப்படுதல்.
- பிறர் வளர்ச்சி கண்டு பொறாமைப்படுதல்.
- இருப்பதைக் கொண்டு திருப்தி அடையாத மனசு.
- தேவையின்றி கடன் வாங்கி ஆடம்பரமாக செலவு செய்தல்.
- தேவையில்லாவிட்டாலும் கூட பிறர் நம்மைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் கார் முதலான ஆடம்பர வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளுதல்.
- ஒருவரின் குறைகளை மற்றொருவரிடம் விவாதித்தல்.
- பிறரை மட்டம் தட்டிப் பேசுதல்.
- சம்பாதிக்கும் பணத்தில் கணிசமான தொகையை எதிர்காலத்திற்காக சேமிக்காமல் இருத்தல்.
- அடிக்கடி ஓட்டல் மற்றும் மால்களுக்குச் சென்று வீண்செலவு செய்தல்.
- உங்களைப் பற்றி நீங்களே பிறரிடம் தற்பெருமையாக பேசுதல்.
மேலே பட்டியல் சிறிதுதான். இன்னும் எவ்வளவோ காரணிகள் உள்ளன. இதில் உங்களுக்கு எத்தனை பொருந்தி வருகிறது என்று பாருங்கள்.
கவலைகளை வரவேற்பதும் வீழ்த்துவதும் உங்கள் கைகளில்தான் உள்ளன. இனி கவலைகளை வீழ்த்தும் வழிகளைப் பார்ப்போம்.
- பிறர் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சி அடையுங்கள். முடியாவிட்டால் பரவாயில்லை. பொறாமைப்படாதீர்கள்.
- கவலைக்கு முக்கிய காரணம் தகுதிக்கு மீறி ஆசைப்படுதல். உங்கள் ஆசை நியாயமான ஆசையாக இருக்க வேண்டும்.
- எக்காரணத்தைக் கொண்டும் பிறருடைய சொந்த விஷயங்களில் தலையிடாதீர்கள்.
- தினந்தோறும் எளியவர்களுக்கு உங்களால் முடிந்த சிறு சிறு உதவிகளைச் செய்யுங்கள்.
- பொய் பேசுபவர்கள் மற்றும் ஏமாற்றுக்காரர்களை நெருங்க விடாதீர்கள்.
- நேர்மையாக எளிமையாக வாழும் மனிதர்களோடு வலியச் சென்று நட்பு பாராட்டுங்கள்.
- பிறர் பொருளுக்கு ஆசைப்படவே படாதீர்கள்.
- கிடைப்பதை நினைத்து திருப்தி கொள்ளுங்கள்.
- நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்து எதற்கும் கவலைப்படாமல் தொடர்ந்து உங்கள் பணிகளைச் செய்து வாருங்கள்.
- எப்போதும் எந்த சந்தர்ப்பத்திலும் நேர்மறையாகவே சிந்தியுங்கள்.
வாழ்க்கை என்பது வாழ்வதற்குத்தானே. வீழ்வதற்கல்லவே. நீங்களாக உங்கள் மன உறுதியைத் தொலைத்தால் ஒழிய உங்களை யாரும் வீழ்த்தவே முடியாது. ஆனால் நீங்கள் மனது வைத்தால் உங்கள் மனதில் தோன்றும் கவலைகளை வீழ்த்த முடியும்.