தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!
குழந்தையாக இருக்கும்போது நாம் எவ்வளவு வளைந்து கொடுக்கிறோம். அடித்தவரிடம் கூட வன்மம் இல்லாமல் செல்வோம். வளர வளர உடலும் மனமும் மனதளவில் இறுகிவிடுகிறது. சமூகத்தில் நமக்கென்று ஒரு அடையாளத்தை நிலைநிறுத்தும் முயற்சியில் நேர்மையை பலி கொடுக்கத் தயாராகிறோம். தவறுகளை ஏற்றுக் கொள்ளும் குணத்தை கூட இழந்து விடுகிறோம். தவறை திருத்திக் கொள்கிறேன் என்று சொல்லாமல் அதை நியாயப்படுத்துவதுதான் மாபெறும் தவறு.
ஒருவர் இன்னொருவரின் தோட்டத்தில் பழங்களைப் பறித்து கோணியில் போட்டு வேலி தாண்டி வெளியே சென்றபோது தோட்ட சொந்தக்காரன் கையில் சிக்கினார். ஏன் பறித்தாய் என்று கேட்டதற்கு காற்றில் இவை உதிர்ந்தன என்றார். கோணியை எதற்கு எடுத்து வந்தாய் என கேட்க, அதுவும் காற்றில் பறந்து வந்தது என்றார். அதுசரி காற்றில் பழங்கள் உதிர்ந்தன, கோணியும் பறந்து வந்தன. இவற்றை கோணியில் நிரப்பியது யார் என தோட்டச் சொந்தக்காரர் கேட்க அவர் "அதுதான் எனக்கும் ஆச்சர்யமாக இருக்கிறது" என்றார். தவறு செய்து கையும் களவுமாக பிடிபட்டால் கூட சிலர் தவற்றை ஒப்புக்கொள்ளாமல் நியாயப்படுத்துவார்கள்.
தவறு என்றே உணராமல் சிலர் வார்த்தைகளாலும், செயல்களாலும் அடுத்தவரைப் காயப்படுத்துவார்கள். நாம் கவனக்குறைவினால் சில தவறுகள் செய்யலாம். ஆனால் தவறு பற்றிய கவனம் இல்லாமல்தான் தொடர்ந்து இயங்குவேன் என்பது வளர்ச்சிக்கு எதிரானது. சிலர் உங்கள் தவற்றை பூதக்கண்ணாடியால் பார்க்கக்கூடும். பார்த்துவிட்டுப் போகட்டுமே. நீங்கள் மன்னிப்பு கேட்டால், யுத்தம் அங்கேயே முடிந்து, குற்றம் சுமத்தியவர் அல்லவா குற்ற உணர்வை சுமப்பார்.? புரிந்துகொள்ளுங்கள். இது விட்டுக் கொடுப்பதோ,தோற்றுப் போவதோ அல்ல. உங்கள் மனம் பக்குவம் பட்டிருக்கிறது என்பதன் அடையாளம்.
வியாபாரம் செய்தாலும் , விளையாட்டில் ஈடுபட்டாலும் உங்கள் தவறுகளை ஏற்றுக் கொள்வதைப் பொறுத்துதான் வாழ்க்கையில் உங்கள் வெற்றி அமைகிறது. தவற்றை ஒப்புக் கொள்ளாதவரை, மனதுக்குள் சிலுவைபோல் குற்ற உணர்வுகளைத் தேவையின்றி சுமக்க நேரிடும்.
தவறுகளை ஒப்புக் கொள்வது என்பது, எதிரிகளையும் நண்பர்களாக்கித் தரும் பலம். எதிர்த்து வீழ்த்தமுடியாத பலம். வாழ்க்கையில் உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச் செல்லும் பலம்.