வெற்றியை நோக்கி தினமும் ஒரு சிறு அடியையாவது எடுத்து வையுங்கள்

வெற்றியை நோக்கி தினமும் ஒரு சிறு அடியையாவது எடுத்து வையுங்கள். அத்துடன் உங்களுடைய அறிவு வளர்ச்சிக்காக சிறு முயற்சியையாவது மேற்கொள்ளுங்கள்.
அதாவது நீங்கள் செய்யும் பணி சம்மந்தமாக ஏதாவது ஒரு புதிய கருத்தை அல்லது நுட்பத்தை ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ளுங்கள்.
மேலும் சுய முன்னேற்றம் சம்பந்தமான கட்டுரைகள் அல்லது நூலின் ஒரு பக்கத்தையாவது படியுங்கள்.
உலகம் வேகமாக மாறிக்கொண்டே இருக்கின்றது. அதன் காரணமாக நீங்கள் செய்யும் பணியின் தன்மையும், வேலைமுறைகளும் மாறக்கூடும்.
ஆகவே, அவற்றிக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் புதிய திறமைகளையும், நுட்பங்களையும் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருந்தால்தான் உங்களுடைய பணியை சிறபாகவும், வாடிகைக்யாளர்களுக்கு திருப்தியளிக்கும் விதத்திலும் செய்ய முடியும்.
வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சிதான் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி! நிறுவனத்தின் வளர்ச்சியே அதில் பணிபுரிவோரின் மகிழ்ச்சி. ஆகவே செய்யும் பணியைச் சிறப்பாகச் செய்தால் நமது வாழ்வு சிறக்கும் என்பதைப் புரிந்து கொண்டு பணியாற்றுங்கள்.
நீங்கள் வெற்றி பெற்றால் அதற்காக மகிழ்ச்சிக் கடலில் மூழ்கித்திளைப்பதும், தோற்றுப் போனால் மூலையில் முடங்கி விடுவதும் நல்ல பண்பல்ல.
ஏனென்றால் வெற்றியும், தோல்வியும் வாழ்வின் அங்கம். வெற்றியையும், தோல்வியையும் சமமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
மனநிலை பக்குவப்படுதற்கு தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.
அதாவது உங்களுடைய ஒவ்வொரு வெற்றியையும், தோல்வியையும் பாடமாக ஏற்றுக்கொண்டு அதிலிருந்து கற்றுக்கொண்டே இருங்கள்.
தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளலாம். வெற்றியிலிருந்து எவ்வாறு கற்றுக்கொள்வது? என நீங்கள் கேட்பதை என்னால் உணர முடிகின்றது. இங்கு இரண்டு முக்கிய விசயங்களைக் கவனிக்க வேண்டும்.
அதாவது உங்களுடைய தோல்வியிலிருந்து கற்றுக்கொள்வது ஒன்று, மற்றவர்கள் தோல்வியிலிருந்து கற்றுக்கொள்வது இன்னொன்று.
நீங்கள் வெல்லும்போது மற்றவர்கள் தோற்றுப் போய் இருக்கக்கூடும். அத்தகைய சூழ்நிலைகளில் வெற்றிக்களிப்பில் மூழ்கி விடுவதைவிட, மற்றவர்கள் ஏன் தோற்றார்கள் என்று எண்ணிப்பார்த்து அதிலிருந்தும் கற்றுக்கொண்டு தொடர்ந்து உயர வேண்டும். இதுதான் வெற்றியிலிருந்து கற்றுக்கொள்ளும் இரகசியமாகும்.
தொழில் வாழ்க்கையில் சிறந்து விளங்குவதற்கு சில பண்பு நலன்களைப் பெற்று இருக்க வேண்டும். உங்களுடைய திறமைக்குத் தகுந்த சம்பளமும், பண்புக்குத் தகுந்த மரியாதையும், கிடைக்கும்.
நீங்கள் வகிக்கும் பதவி பெரியதாக இருந்தாலும், சிறியதாக, உங்களுடைய நற்பண்புகளை பொறுத்தே மற்றவர்கள் உங்களை மதிக்கின்றார்கள்.
ஆகவே, நற்பண்புகளின் பிறப்பிடமாகவும், உறைவிடமாகவும் நீங்கள் இருந்தால் எப்பொழுதும் உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் உண்டு.
மேலும், மற்றவர்களை நன்கு மதித்து, உரிய மரியாதை கொடுக்கும் பண்புடையவராகவும் நீங்கள் இருக்க வேண்டும்.
மனித உறவுகளை மேம்படுத்தும் பண்புகளை மென்மேலும் வளர்த்துக்கொண்டே இருங்கள்.
ஒவ்வொருவரிடமும் அவர்களுக்கென்று தனிப்பண்பும், சுய கௌரவமும் உள்ளது. அதை உணர்ந்து அவர்களை மதித்து பழகுங்கள்.
உங்களுக்கு வெற்றிப் பாதையை அமைத்துத் தருபவர்கள், உங்களுடன் பணிபுரிபவர்களே என்பதை உணர்ந்து மனித நேயத்துடன் பழகுங்கள். வெல்லுங்கள்!