பள்ளி திறப்பு தள்ளிப்போனால் உண்ணாவிரத போராட்டம்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தள்ளிவைக்கப்பட்டால் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகங்கள் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு (பெப்சா) அறிவித்துள்ளது.
மதுரையில் பெப்சா மாநில தலைவர் ஆறுமுகம் கூறியதாவது:தமிழகத்தில் 9 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் 40 லட்சம் மாணவர்கள் நேரடி வகுப்புக்கு சென்று ஒரு மாதம் ஆகியும் பெரிய அளவில் நோய்பரவல் இல்லை. மேலும் அரசின் தீவிர முயற்சியால் 18 வயதுக்கு மேல் உள்ள 70 சதவீதம் பேர் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.ஐ.சி.எம்.ஆர்., உள்ளிட்ட அமைப்புகள் பள்ளி திறக்க வலியுறுத்தியுள்ளன.
இச்சூழலில் அக்டோபர் முதல் வாரம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை திறக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் நவம்பர் 1ல் திறப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது, தனியார் பள்ளிகளுக்கு அதிர்ச்சியாக உள்ளது. 19 மாதங்களாக பள்ளி மூடப்பட்டுள்ளதால் பள்ளி வாகனங்களை மீண்டும் தயார் செய்ய லட்சக்கணக்கில் பணம் செலவாகும்.
தனியார் பள்ளிகள் ஏற்கெனவே மீளமுடியாத கடனில் தத்தளிக்கின்றன. இந்நிலையில் தீபாவளி, மழைக் காலம் போன்றதை காரணம் காட்டி நவம்பர் 1ம் பள்ளி திறக்காமல் தள்ளி வைக்கப்பட்டால் மாநிலம் முழுவதும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகங்கள் முன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.