ஆண்டுக்கு 5 இலட்சத்துக்கு மேல் வருமானம் உடையவர்களுக்கு வரிச்சலுகை இல்லை!
வரிக்குட்பட்ட வருமானம் ஆண்டுக்கு 5 இலட்சம் உள்ளவர்களுக்கு மட்டுமே வரிச்சலுகை!
இன்று(01-02-2019) தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில், விவசாயிகள் மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் லோக்சபாவில் இன்று மத்திய நிதி அமைச்சர் (பொறுப்பு) பியூஷ் கோயலால் தாக்கல் செய்யப்பட்டது. காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் ஆரம்பித்ததும், சுமார் 20 நிமிடங்களுக்கு அரசின் நான்கரை ஆண்டு கால சாதனைகளை வரிசையாக அடுக்கிப் பேசினார் பியூஷ் கோயல். இதன்பிறகு, தனது பட்ஜெட் உரையில், நடுத்தர வர்க்கத்தினரையும், விவசாயிகளையும் கவரும் பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். பொதுத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இடைக்கால பட்ஜெட் என்பது, பொது பட்ஜெட்டைபோல பல புதிய அறிவிப்புகளை கொண்டிருந்தது. அதில் பல கோடி பேரை சென்றடைய கூடிய டாப் 3 அறிவிப்புகளை பார்க்கலாம்.
இதுவரை ரூ.2.50 லட்சம் வரையிலான தனி நபர் ஆண்டு வருமானத்திற்கு வரி விலக்கு வழங்கப்பட்டது. 2.50 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய் மீது 5 சதவீதம், வருமான வரி விதிக்கப்பட்டு வந்தது. இப்போது தனி நபர் ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய் வரையில் உள்ளோருக்கு இனி வரி கிடையாது. இதனால் 3 கோடி பேர் பலனடைவார்கள். குறிப்பாக நடுத்தர வர்க்கத்து, மாத சம்பளம் பெறுவோருக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். பாஜகவின் வாக்கு வங்கியான மாத ஊதியதாரர்களை இந்த அறிவிப்பு குறி வைத்துள்ளது.
வரிக்குட்பட்ட வருமானம் (Taxable Income) ரூ.5 லட்சம் உள்ளவர்களுக்கு U/S 87A (Tax Rebate) ன்படி வரி விலக்குத்தொகை ரூ 2500 லிருந்து ரூ.12500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இனிமேல் ஆண்டு வருவாய் ரூ.5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே வருமான வரி வசூலிக்கப்படும். ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் உடையவர்களுக்கு தற்போதைய நிலையே தொடரும். இந்த ஆண்டை விட அடுத்த ஆண்டு அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும்.ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய் மீது 20 சதவீத வரி விதிக்கப்படும்.
சேமிப்பு வரி விலக்கு வருமான வரித்துறை சட்டப்பிரிவு 80சி-ன்கீழ், அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை விலக்கு பெற முடியும். இதில் பெண் குழந்தைகளுக்கான சுகன்ய சம்ரிதி/செல்வமகள் சேமிப்பு திட்டம், பல்வேறு வகையான முதலீடுகள் உள்ளிட்டவை வந்துவிடும்.
நிலையான கழிவு அதிகரிப்பு இதுதவிர நிலையான கழிவு என்ற பெயரில் ரூ.50 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும். கடந்த வருடம்தான் நிலையான கழிவு மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது ரூ.40 ஆயிரம் என அறிவிக்கப்பட்ட நிலையான கழிவு தொகை இந்த ஆண்டு ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதையும் சேர்த்தால், 7 லட்சம் ரூபாய் வரை கணக்கு காட்டி விலக்கு பெற்றுவிடலாம். இதுதவிர 80 சிசி பிரிவின்கீழ் வரும் முதலீடுகளுக்கு ரூ.2 லட்சம் வரை வரி விலக்கு உள்ளதால், அதையும் சேர்த்தால் 9 லட்சம் வரையிலான வருவாய்க்கு கணக்கு காட்டிவிடமுடியும்.