ஸ்மார்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய இணைய விண்ணப்ப பதிவு - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தேர்வுக்கான பதிவு பணிகளை, நவீன, ஸ்மார்ட் தொழில் நுட்பத்தில், தனியாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது.
தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை கட்டுப்பாட்டில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் செயல்படுகிறது. இந்த நிறுவனம், பல்வேறு அரசு துறைகளில் காலியாகும் பணியிடங்களை நிரப்பப், போட்டி தேர்வு நடத்துகிறது.விண்ணப்ப படிவங்களை பெற்று, தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஏற்ப, இணைய விண்ணப்ப முறை, சில ஆண்டுகளாக அமலில் உள்ளது. இந்நிலையில், இன்னும் நவீன ஸ்மார்ட் தொழில்நுட்ப முறையில், விண்ணப்ப பதிவு மற்றும் தேர்வு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
இந்த பணிகள், தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, டெண்டர் முறையில் வழங்கப்பட உள்ளன. புதிய முறைப்படி, அனைத்து விண்ணப்பதாரர்களும், கணினி, டேப்லெட், மொபைல் போன் வாயிலாக, ஆன்லைன் பதிவுகளை மேற்கொள்ளலாம். அதேபோல, டி.என்.பி.எஸ்.சி., பெயரில், மொபைல் ஆப்பும், தயார் செய்யப்பட உள்ளது; அதிலும், பதிவு செய்யலாம்.
விண்ணப்பம் பதிவு செய்வது, கட்டணம் செலுத்துவது, கட்டண சலுகை பெறுவது, சான்றிதழ்களை இணையத்தில் பதிவு செய்வது, ஒரு முறை பதிவை மேற்கொள்வது என, அனைத்து பணிகளையும், இணையத்தில் தேர்வர்கள் மேற்கொள்ள முடியும். இந்தப் பதிவின் போது, அனைத்து தேர்வர்களுக்கும், குறுஞ்செய்தி மற்றும் இ - மெயில், அலர்ட் செய்திகள் அனுப்பப்படும்.மேலும், அனைத்து தேர்வர்களும், ஆதார் எண்ணை பதிவு செய்வது கட்டாயம்.
மத்திய அரசு விதிகளின் படி, ஆதார் எண்ணை வேறு பயன்பாட்டுக்கு வழங்காமல், தேர்வர்களின் விபரங்களை சரிபார்ப்பதற்கு மட்டும் பயன்படுத்தப்பட உள்ளது. அதேபோல, தேர்வர்களின் போலி விண்ணப்ப பதிவுகள், ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை கண்டுபிடிக்கவும், ஆதார் எண் பயன்படுத்தப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.