அரசு பள்ளிகளில், ஆங்கில பேச்சத் திறன்: பள்ளி கல்வித்துறை முடிவெடுக்க ஐகோர்ட் கெடு
அரசு பள்ளிகளில், ஆங்கில பேச்சத் திறன் வகுப்பை அறிமுகப்படுத்த கோரிய மனு மீது, எட்டு வாரங்களில், பள்ளி கல்வித்துறை செயலர் முடிவெடுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதி, முன்னாள், எம்.எல்.ஏ., அப்பாவு தாக்கல் செய்த மனு:தமிழகத்தில், 37 ஆயிரத்து, 211 அரசு பள்ளிகள்; 8,405, அரசு உதவி பெறும் பள்ளிகள்; 12 ஆயிரத்து, 419 தனியார் பள்ளிகள் உள்ளன. 1.25 கோடி மாணவர்கள், இந்தப் பள்ளிகளில் படிக்கின்றனர். தனியார் பள்ளிகளில் மட்டும், 40 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.
அரசு, ஆண்டுக்கு, 27 ஆயிரம் கோடி ரூபாயை, கல்விக்காக செலவு செய்கிறது. தமிழ், முதல் மொழிப் பாடமாகவும், இரண்டாம் வகுப்பு முதல் மேனிலைக் கல்வி வரை, ஆங்கிலம், இரண்டாம் பாடமாகவும் கற்பிக்கப்படுகிறது. மேனிலைக் கல்வி தேர்ச்சி பெற்ற மாணவர்களால், ஆங்கிலத்தில் சரளமாக பேச, எழுத முடியவில்லை. இதனால், தொழில் படிப்புகள் மற்றும் இதர படிப்புகளில் சேரும் போது, அவர்கள் சிரமப்படுகின்றனர்.
மாநில பாடத் திட்டத்தில், தமிழ் வழி கற்பவர்கள், அதிக மதிப்பெண் எடுத்தாலும், ஆங்கிலத்தில் தகவல் தொடர்பு கொள்ளும் திறன் குறைவாகவே உள்ளது. அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் கிடையாது. எனவே, அரசு நடத்தும் தொடக்கப் பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளை துவங்க வேண்டும்.அனைத்து பள்ளிகளிலும், ஸ்போக்கன் இங்கிலீஷ் என்ற, ஆங்கில பேச்சு திறன் வகுப்பை, ஒரு பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும். இது குறித்து, அரசுக்கு அனுப்பிய மனுவை பரிசீலிக்க,உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதிகள், எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தபோது, மாநிலத்துக்கு வெளியிலும், உலகம் முழுவதிலும், தகவல் தொடர்புக்கான இணைப்பு மொழியாக, ஆங்கிலம் உள்ளது. அரசு பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்காக, ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பை அறிமுகப்படுத்த, அரசு முழு கவனம் செலுத்தும் என, நம்பிக்கை தெரிவித்தனர்.
இவ்வழக்கில், பள்ளி கல்வித்துறை, பதில் மனு தாக்கல் செய்யவும், நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். இதையடுத்து, இம்மனு, நேற்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் எழுப்பப்பட்டுள்ள பிரச்னை, மாநில கல்வி கொள்கை சம்பந்தப்பட்டது. இதில், நீதிமன்றம், தன் அதிகாரத்தை செலுத்த முடியாது. மனுதாரர் அளித்த மனு மீது, எட்டு வாரங்களில் பள்ளி கல்வித்துறை செயலர் முடிவெடுக்க வேண்டும். அதற்கு முன், மனுதாரர் தரப்பையும் கேட்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.