ஜனவரி 4ந் தேதி துவங்குகிறது சென்னை புத்தக கண்காட்சி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்கிறார்
சென்னை நந்தனத்தில் நடைபெறவுள்ள 42வது புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கவுள்ளார்.
பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம், ஆண்டுதோறும் சென்னை புத்தகக் கண்காட்சியை நடத்திவருகிறது. இந்நிலையில், 42வது சென்னை புத்தகக் கண்காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் ஜனவரி 4ஆம் தேதி தொடங்கி, ஜனவரி 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த புத்தகக் கண்காட்சிக்காக, ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 820 அரங்குகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், அதில் 487 அரங்குகள் தமிழ் அரங்குகள் என் கூறப்பட்டுள்ளது.
இதில் 294 ஆங்கில அரங்குகளும், 13 மல்டி மீடியா அரங்குகளும், 26 பொது அரங்குகளும் இடம்பெறும் என பபாசி தெரிவித்துள்ளது. சுமார் 12 லட்சம் தலைப்பில், ஒன்றரை கோடி புத்தங்கள் இடம்பெறும் எனக் கூறப்படும் நிலையில், இந்த புத்தகக் கண்காட்சியை வரும் ஜனவரி 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்க உள்ளதாக பபாசி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 5 லட்சம் மாணவர்களுக்கு இலவச அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர்கள், மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் நினைவாக ஒரு கலையரங்கம் ஒன்று நிறுவப்பட உள்ளதாகவும் பபாசி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.