அறுவை சிகிச்சைக்கு ரூ.1.32 கோடி: மத்திய அரசு உதவியுடன், கோவை கல்லூரி மாணவர் அசத்தல்
கோவை, மத்திய அரசின் நிதியுதவியுடன், கோவை கல்லுாரி மாணவர், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரோபோவின், 'ஹார்டுவேர்' பாகங்களை வடிவமைத்து அசத்தி உள்ளார்.
கோவை, பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி மாணவர், அரவிந்த்குமார்,இந்த ரோபோவை வடிவமைத்துள்ளார். 'ஹார்டுவேர்' பகுதிகள் முழுமையாக தயாராகியுள்ள நிலையில், 'சாப்ட்வேரு'க்கான செயல்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
மாணவர் அரவிந்த்குமார் கூறியதாவது:எம்.இ., முதலாமாண்டு படிக்கிறேன். மத்திய அரசின், அறிவியல் தொழில்நுட்பத் துறை சார்பில், அறுவை சிகிச்சை ரோபோ கண்டுபிடிப்புக்கு, 1.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஹார்டுவேர் பாகங்கள் முழுமையாக தயார் செய்து விட்டோம். சாப்ட்வேருக்கான பணி நடக்கிறது. பேராசிரியர்கள் வினோத், சுந்தரம், பிரபாகரன் வழிகாட்டுதலின் படி, ஆராய்ச்சிகள் நடக்கின்றன.
அறுவை சிகிச்சையின் போது, டாக்டர்கள் பலரின் ஒத்துழைப்பு அவசியம். மணிக்கணக்கில் இடைவெளியில்லாமல் அனைவரும் நின்றபடி இருக்க வேண்டும். இதில், சில தவறுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.ரோபோக்கள் பயன்படுத்தும்போது, டாக்டர்கள் எளிதாக அமர்ந்து கொண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம்.அறுவை சிகிச்சைக்கான துளையும் மிகவும் சிறியதாகவே இருக்கும். இரண்டு மாதங்களில் இதற்கான பணிகள் முழுமை பெறவுள்ளது.
இதுதவிர, சுற்றுப்புறங்களை, 'சென்சார்' செய்து, ரோபோக்கள் இயங்க உதவும், 'போர் ஸ்டார் சென்சார்' வடிவமைத்துள்ளேன். இதன் வடிவமைப்பிற்காக காப்புரிமையும் பதிவு செய்து உள்ளேன். இதன் மூலம், ரோபோக்கள் தங்கள் எதிரில், சுவர் அல்லது மனிதர்கள், பொருட்கள் வரும்போது, தானாக, 'சென்சார்' செய்து கொள்ளும். வெளிசந்தையில் கிடைக்கும் விலையை காட்டிலும், குறைவான விலையில் என் வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
நன்றி: தினமலர் நாளிதழ்