பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நலன் கருதி 800 அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் உடனடியாக நியமிக்க வேண்டுமென கணினி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் குமரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதிய பாடத்திட்டத்தில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 3 வகையான கணினி பாடபுத்தகம் உள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, இந்த ஆண்டு முதல் கணினி தொடர்பான இரண்டு புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. தமிழக பள்ளி கல்வியில், முதல் கட்டமாக, 1, 6, 9 மற்றும் பிளஸ்1 வகுப்புகளுக்கு, இந்த ஆண்டு முதல், புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அதைத் தொடர்ந்து, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும்தொழிற்கல்வி குரூப் மாணவர்களுக்கும், ‘ஆர்ட்ஸ் குரூப்’ மாணவர்களுக்கும், புதிதாக இரண்டு பாடங்கள் சேர்க்கப்பட உள்ளன.இந்த ஆண்டே இந்தப் புதிய கணினி பாடங்கள், அமலுக்கு வந்துள்ளது. அதாவது, கணித பிரிவு மாணவர்களுக்கு கணினி அறிவியல் என்ற பாடமும், வரலாறு, பொருளியல், வணிகக் கணிதம் போன்ற ஆர்ட்ஸ் பாடப்பிரிவினருக்கு கணினி பயன்பாடுகள் பற்றிய கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் என்ற பாடம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோன்று அனைத்து வகை தொழிற்கல்வி பிரிவுகளுக்கும் கணினி தொழில்நுட்பம் என்ற பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய பாடங்கள் இந்த ஆண்டு பிளஸ்1 வகுப்புக்கு நடைமுறைக்கு வந்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் பிளஸ்2 வகுப்புக்கும் அறிமுகம் செய்யப்படுகின்றன. பிளஸ்1க்கு கடந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.இரண்டு மாதங்களுக்கு முன்பு கணினி ஆசிரியர்கள் பணியிட மாற்றத்திற்கு பிறகு தலா 800 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் காலியாகவே உள்ளது. இதனால் பொதுத் தேர்வை எதிர்நோக்கும் கணினி பயிலும் மாணவர்கள் ஆசிரியர்கள் இன்றி
தவித்து வருகின்றனர்.எனவே நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கும் வரை அரசு உடனடியாக பெற்றோர் ஆசிரியர்கள் கழகத்தின் வாயிலாக பி.எட் பயின்ற கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று அறிக்கை
யில் கூறப்பட்டுள்ளது.