தன்னலம் கருதாமல் சேவைசெய்யும் ஆசிரியச் செம்மல்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் - கல்விகுரு
ஆசிரியராய் இருந்து ஜனாதிபதியாய் உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்!
ஆசிரியப்பணி அறப்பணி என்பார்கள். அத்தகைய ஆசிரியர்களை வணங்கி அவர்களின் சேவையை நினைவு கூறும் நாளே ஆசிரியர் தினம். ஆசிரியராய் வாழ்வைத் தொடங்கி நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்த சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த நாளை நாடுமுழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடுகின்றனர்.
ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளை ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடுகிறோம்.
ஆசிரியரை பெருமைப் படுத்துவோம்
ஆசிரியர்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்திய நாட்டின் முதல் குடிமகனாய் (ஜனாதிபதி) இருந்த பேராசிரியர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், 1888 செப்டம்பர் 5-ம் தேதி திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். தன் திறமையால் பேராசிரியராகவும், பல்கலைக் கழகங்களின் துணை வேந்தராகவும், இந்திய அரசின் தூதராகவும் பணியாற்றிய மேதை ராதாகிருஷ்ணன்..!
இந்தியாவின் துணை ஜனாதிபதியாகவும், ஜனாதிபதியாகவும் இருந்த ராதாகிருஷ்ணன நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டார். இவரைப் பல்வேறு விருதுகள் தேடி வந்தன. இள வயதிலேயே ராதாகிருஷ்ணன் பல நூல்களை எழுதித் தனது எழுத்தாற்றலை அனைவரும் அறியும்படி செய்தார். இவர் மேடைப் பேச்சிலும் வல்லவர். வெளிநாடுகளில் அவர் ஆற்றிய சிறப்புரைகள் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தன. டாக்டர் ராதா கிருஷ்ணனுக்கு அவருடைய சேவையை பாராட்டி 133 கௌரவ டாக்டர் பட்டங்கள் வரை கிடைத்துள்ளன.
எளிமையான வாழ்க்கை
நாட்டின் 2-வது ஜனாதிபதியாக பொறுப்பேற்று திறம்பட பணியாற்றிய டாக்டர் ராதாகிருஷ்ணன் பதவி காலம் முடிந்ததும், சென்னை மைலாப்பூரில் உள்ள அவருடைய சொந்த பங்களாவில் இறுதி காலம் வரை வாழ்ந்தார். அவர் எப்படி எளிமையாக வாழ்ந்தாரோ அதே போல் அவர் வசித்த பங்களாவும் ஆடம்பரமான அழகு வேலைப்பாடுகள் இன்றி அன்று கண்ட நிலையில் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இவர் 1975, ஏப்ரல் 17-ம் தேதி மறைந்தார். அவரது சேவையைப் பாராட்டி சென்னையில் அவர் இல்லம் அமைந்துள்ள சாலைக்கு 'டாக்டர் ராதாகிருஷ்ணன சாலை' எனப் பெயரிடப்படுள்ளது. ஆசிரியர் தினத்தின் போது ஆசிரியர்களுக்கு மாநில விருதும், தேசிய விருதும் வழங்கிச் சிறப்பிக்கப்படுகின்றன. 1997-ம் ஆண்டு முதல் தமிழக அரசு நல்லாசிரியர் விருதை 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' என்னும் பெயரில் வழங்கி வருகிறது.
ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.
மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும்.
தாயும் தந்தையும் குழந்தையை உலகுக்கு தருகின்றனர். ஆனால், ஓர் ஆசிரியர் உலகத்தையை குழந்தைக்கு தருகிறார் என்றால் மிகை இல்லை. ஆசிரியர் அரவணைப்புடன் கல்வி போதிப்பவர், மாணவனின் திறமைகளையும் வெளிக் கொண்டு வர விரும்புவர். எனவேதான் ஆசிரியர் பணியை 'புனிதமான தொழில்' (Noble Profession)என்கிறார்கள். 'மாதா, பிதா, குரு, தெய்வம்' என இந்தியாவில் பெற்ற தாய் - தந்தைக்கு அடுத்த இடத்தை ஆசிரியருக்கு வழங்கி இருக்கிறார்கள். ஆசிரியருக்கு அடுத்த இடம்தான் இறைவனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நாம் அனைவரும் ஏதாவது ஒருவகையில் ஆசிரியர்களுக்குக் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.அறிவுப்படையை உருவாக்கும் பொறுப்பை கடமையாக கொண்ட ஆசிரியர்களை அனைவரும் போற்றி பாராட்டுவோம்.