இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்னாநந்தாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
மிகக்குறைந்த வயதில், இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற, சென்னை மாணவன், பிரக்னாநந்தாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இளம் கிராண்ட் மாஸ்டர்,பிரக்னாநந்தா,உற்சாக வரவேற்பு
இத்தாலி, ஆர்டிசி நகரில், 4வது கிரெடின் ஓபன் செஸ் தொடர், 16ல் துவங்கி, 24ம் தேதி வரை நடந்தது. இந்த போட்டியில், சென்னை, முகப்பேர் பகுதியைச் சேர்ந்த, பிரக்னாநந்தா பங்கேற்று, இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார்.
மேலும், மிகக்குறைந்த வயதில், (12 ஆண்டு, 10 மாதம், 13 நாட்கள்) 'கிராண்ட் மாஸ்டர்' அந்தஸ்து பெற்ற முதல் இந்தியர் மற்றும் சர்வதேச அளவில், இரண்டாவது வீரர் எனும் பிரம்மாண்ட சாதனையை நிகழ்த்தினார்.
இந்நிலையில், இத்தாலியில் இருந்து, நேற்று மதியம், 12:00 மணிக்கு, பிரக்னாநந்தா, சென்னை விமானம் நிலையம் வந்தார். அப்போது, அவரது பெற்றோர் உள்ளிட்ட பலர், அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரக்னாநந்தா, முகப்பேர் வேலம்மாள் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை, 3:00 மணிக்கு, அப்பள்ளியில், பிரக்னாநந்தா பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளியில், சக மாணவர்கள், அவருக்கு பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.
இதையடுத்து அவருக்கு, பள்ளி சார்பில், பாராட்டு விழா நடந்தது. அதில், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர், பிரக்னாநந்தாவை பாராட்டி பேசினர்.
இந்த சாதனை குறித்து, பிரக்னாநந்தா கூறியதாவது: எனக்கு, 3 வயது இருக்கும் போதே, செஸ் விளையாடஆரம்பித்து விட்டேன். என் அக்கா வைஷாலியும், செஸ் வீராங்கனை தான். அவர் தான், எனக்கு செஸ் விளையாட கற்றுக்கொடுத்தார். மாவட்ட அளவிலான போட்டிகள் துவங்கி, சர்வேதச அளவிலான போட்டிகள் வரை, இதுவரைக்கும், ஏராளமான போட்டிகளில் பங்கேற்றுள்ளேன்.
போட்டிகள் தொடர்பாக, 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்று விளையாடி இருக்கிறேன். இந்த செஸ் வாழ்க்கையில், மூன்று தடவை, ஆசிய சாம்பியன் பட்டத்தையும்; இரண்டு தடவை, உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளேன்.தற்போது, கிராண்ட் மாஸ்டர் பெற்றது மகிழ்ச்சியை தருகிறது. இதற்கு மிக முக்கியமான, என் குடும்பம், பயிற்சியாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து தரப்பிற்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
எனக்கு வாழ்த்து தெரிவித்த, விஸ்வநாதன் ஆனந்திற்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன். அவருடன், ஒரு தடவையாவது விளையாட வேண்டும் என்பது, என் விருப்பம். தற்போது, என்னுடைய செஸ் ரேட்டிங்கை,இன்னும் அதிகமாக உயர்த்த வேண்டும். அது தான், இப்போது, என்னுடைய அடுத்தகட்ட லட்சியம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.நான் செஸ் போட்டியில், ஐந்து முறை, ஆசிய சாம்பியன் பட்டத்தையும்; இரண்டு முறை உலக சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளேன்.
பிரக்னாநந்தாவிற்கு, 6 வயதிருக்கும் போதே, 7 வயதிற்குட்பட்டோருக்கான தேசிய போட்டியில், அவர் இரண்டாம் இடம் பெற்றார். அதன் பிறகு தான், அவர் திறமையை ஊக்குவிக்கும் விதமாக, தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டது. அடுத்தடுத்த காலகட்டத்தில், அவர் திறமையை பார்க்கும் போது, அவர் உலகளவில் சாதிப்பார் என, நம்பினோம். அதை நிறைவேற்றி விட்டார்.
வைஷாலி,பிரக்னாநந்தா சகோதரி,சர்வதேச செஸ் வீராங்கனை, (பிளஸ் 2 மாணவி, முகப்பேர் வேலம்மாள் பள்ளி)நாங்கள், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தோர். பிரக்னாநந்தாவும், எங்கள் மகளும், செஸ் விளையாட ஆரம்பித்த காலகட்டத்தில், போட்டிகளுக்கு அழைத்து செல்வதில், சிக்கல்கள் இருந்தன. மிக முக்கிய பிரச்னையே, பொருளாதாரம் தான். இப்போது, அதுபோன்ற பிரச்னைகளை கடந்து வந்து விட்டோம்.
இந்த அங்கீகாரம், அவனது விடா முயற்சிக்கும், கடும் உழைப்பிற்கும் கிடைத்துள்ளது. இன்னும் பல சாதனைகளை, அவன் நிகழ்த்துவான் என்பதில், எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.
-ரமேஷ்பாபு, நாகலஷ்மி,
பிரக்னாநந்தாவின் பெற்றோர்