நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயமில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு
'நீட்' நுழைவுத் தேர்வு உள்பட அகில இந்திய அளவில் நடத்தப்படும் எந்தத் தேர்வுக்கும் ஆதார் எண் கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தத் தேர்வுகளை எழுத விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் ஆதார் எண் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (ஆதார் ஆணையம்) சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறியதாவது:
நீட் தேர்வெழுத விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் ஆதார் எண்ணைப் பெற வேண்டும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) உத்தரவு எதையும் ஆதார் ஆணையம் பிறப்பிக்கவில்லை.
வேண்டுமானால், ஜம்மு-காஷ்மீர், மேகாலயம், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில், அடையாளச் சான்றாக, மாணவர்களின் வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, கடவுச்சீட்டு போன்றவற்றை சிபிஎஸ்இ பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கே.கே.வேணுகோபால் கூறினார்.
அதையடுத்து, வரும் கல்வியாண்டில் நீட் நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்கள் உள்பட அகில இந்திய அளவில் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களிடமும் ஆதார் எண்ணை சிபிஎஸ்இ கேட்கக் கூடாது; இந்தத் தகவலை, சிபிஎஸ்இ தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக, நீட் நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்கள் ஆதார் எண்ணை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை, குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 27-ஆம் தேதி நிராகரித்துவிட்டது.
அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது