பல்கலைக்கழகங்கள் ஆற்றல்சார் மையங்களாக உருவாக வேண்டும்
பல்கலைக்கழகங்கள், மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் ஆற்றல்சார் மையங்களாக உருவாக வேண்டியது அவசியம் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.
பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் 67-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய பிறகு வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
பல்வேறு துறைகளில் சீர்திருத்தம் கொண்டு வருவது காலத்தின் கட்டாயமாகும். இதைத்தான் சீர்திருத்தம் (ரிஃபார்ம்), செயலாக்கம் (பெர்ஃபார்ம்), மாற்றம் (டிரான்ஸ்ஃபார்ம்) என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். எனவே, நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டியுள்ளது.
நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடும் வகையில் இளைஞர்களை திறமையுடன் உருவாக்குவதற்கு தற்போதைய பாடத் திட்டத்திலும், கல்வி முறையிலும் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டியுள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர், 35 வயதுக்கும் குறைவானவர்கள். இளைய தலைமுறையினருக்கு சரியான பாதைகளைக் காட்டி வழிநடத்த வேண்டும். இதுவே பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் தலையாய கடமையாகும்.
பல்கலைக்கழகங்கள், மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் ஆற்றல்சார் மையங்களாக உருவாக வேண்டும். அந்த இலக்கை எட்டுவதற்கு பேராசிரியர்களாகிய நீங்கள் கடுமையாக பாடுபட வேண்டும்.
ஒவ்வொரு மாணவரும் தனது தாய்மொழியைக் கற்று, அதில் உரையாட வேண்டும். ஒருவர் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு மாநில அரசும் தங்களது தாய்மொழியை அனைவருக்கும் கட்டாயப் பாடமாக்க வேண்டும்.
ஹிந்து என்பது ஒரு மதம் அல்ல; அது ஒரு கலாசாரமாகும். அது ஒரு வாழ்வியல் நெறிமுறையாகும். இளைய தலைமுறையினர் தங்களது கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும், இந்த சமூகத்துக்காக பாடுபட்ட தலைவர்களையும் மறந்துவிடக் கூடாது.
இளைய தலைமுறையினருக்கு மிகப்பெரிய சமூகப் பொறுப்பு உள்ளது. சமூகப் பிரச்னைகளைக் காணும்போது, அவற்றை நடுநிலையோடு அணுக வேண்டும். நாட்டின் பன்முகக் கலாசாரத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும்.
மாணவர்கள் உயரிய நோக்கத்துடன் தங்கள் வாழ்வில் சிறப்பான இடத்தை எட்டுவதற்கு கடினமாக உழைக்க வேண்டும். பல்கலைக்கழகத்தின் செனட் குழு உறுப்பினர்களும், சிண்டிகேட் குழு உறுப்பினர்களும் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வெங்கய்ய நாயுடு கூறினார்.
ஜே.எஸ்.கேஹருக்கு டாக்டர்பட்டம்: விழாவில், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், பிரபல தடகள வீரர் மில்கா சிங், பிரபல விஞ்ஞானி எம்.எம்.சர்மா உள்ளிட்டோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி வெங்கய்ய நாயுடு பாராட்டினார்.