வெளிநாட்டில் மருத்துவம் படிக்க ‛நீட் கட்டாயம்
மருத்துவக் கல்லுாரிகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வான, 'நீட்' தேர்வு எழுவதுபோல, வெளிநாட்டில் உள்ள மருத்துவக் கல்லுாரியில் படிக்கவும், நீட் தேர்வு நடத்த, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மருத்துவக் கல்லுாரியில் சேருவதற்காக, 'நீட்' எனப்படும் நுழைவுத் தேர்வு, 2016 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வெளிநாடுகளில் மருத்துவம் படிப்போர், நாடு திரும்பி டாக்டராக பணி புரிவதற்கான லைசென்ஸ் பெற வேண்டும். இதற்காக, எப்.எம்.ஜி.இ., எனப்படும் வெளிநாட்டு மருத்துவ பட்ட தேர்வு என்ற தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும், 7,000 பேர், மருத்துவம் படிப்பதற்காக வெளிநாடு செல்கின்றனர். குறிப்பாக சீனா மற்றும் ரஷ்யாவுக்கு பெரும்பாலானோர் செல்கின்றனர். ஆனால், இந்த தகுதித் தேர்வை எழுதுவோரில், 15 சதவீதம் பேரே தேர்ச்சி பெறுகின்றனர். தேர்ச்சி பெறாதவர்கள், டாக்டராகப் பணிபுரிவதற்கான லைசென்ஸ் பெறாமலேயே, டாக்டராக பணியாற்றுகின்றனர்.
இதை தடுக்கும் வகையில்,நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான், மருத்துவம் படிக்க வெளிநாடு செல்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என்ற நடைமுறைக்கு மத்திய சுகாதார துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.