தேர்வு பாதிக்காமல் போராட்டம் : ஜாக்டோ -ஜியோ முடிவு
தேர்வு பணிகள் பாதிக்காத வகையில், சென்னையில் நடக்கும் தொடர் மறியலில் பங்கேற்க ஜாக்டோ- ஜியோ முடிவு செய்துஉள்ளது.பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் கோரியும் 2017 செப்., 7 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஈடுபட்டனர். நீதிமன்றம் உத்தரவால் போராட்டத்தை கைவிட்டனர். 'வல்லுனர் குழு அறிக்கை 2017 நவ., 30க்குள் சமர்ப்பிக்கப்படும்' என அரசு உறுதி அளித்தது. ஆனால், அறிக்கை தாக்கல் செய்ய ஐந்து முறை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்க ஜாக்டோ- ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பிப்., 21 முதல் சென்னையில் தொடர் மறியல் நடத்த முடிவு செய்துள்ளனர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பாதிக்காத வகையில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.'பிப்ரவரி இறுதிக்குள் முடிவு ஏற்படாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும்' என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலர் பேட்ரிக் ரெய்மண்ட் தெரிவித்தார்.