கல்வித் துறையில் தமிழகத்திற்கு மத்திய அரசு ஒத்துழைப்பு: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்
கல்வித் துறையில் தமிழகத்திற்கு மத்திய அரசு போதிய ஒத்துழைப்பை அளித்து வருவதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். இது தொடர்பாக புது தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
கல்வித் துறையில் புதிய மாற்றங்கள் ஏற்படும் வகையில் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. ஆனால், கல்விக்கான மிகைவரியை (செஸ்) அதிகரிப்பு தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
தமிழக கல்வித் துறைக்கு போதுமான ஒத்துழைப்பை மத்திய அரசு வழங்குகிறது. மத்திய அரசின் உதவியுடன் தமிழக கல்வித் துறையில் பெரிய மாற்றத்தை தமிழக அரசால் ஏற்படுத்த முடியும். 'நீட்' தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்.
மார்ச் மாத இறுதிக்குள் அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்குவது தொடர்பாக ஆராய்ந்து வருகிறோம். 'நீட்' தேர்வு வழக்கை விரைந்து முடிக்க தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு இடமில்லை என தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்ததாக கூறப்படும் கருத்து குறித்து அவர்தான் விளக்க வேண்டும் என்றார்.
முன்னதாக, புது தில்லி அருகே குருகிராமில் அமைந்துள்ள சாம்சங் நிறுவனத் தலைமையகத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற, கற்றல் மற்றும் கற்பித்தலுக்கான கையடக்க கருவிகள், மென்பொருள்கள் மற்றும் செல்லிடப்பேசி செயலிகள் குறித்த செயல்முறை விளக்க கூட்டத்தில் அமைச்சர் கே. எ. செங்கோட்டையன் கலந்துகொண்டார்.
இக்கூட்டத்தில் கற்றல் மற்றும் கற்பித்தலுக்கான மின்னனு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பக் கருவிகள், டிஜிட்டல் வகுப்பறை, செயலிகள் குறித்த அறிமுகம், செயல்முறை விளக்கங்களை சாம்சங் நிறுவன அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், சாம்சங் (இந்தியா) நிறுவன துணைத் தலைவர் தீபக் பரத்வாஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.