இன்ஜி., படிப்புக்கு, ஆன்லைன் கவுன்சிலிங் உறுதி : பெட்டி, படுக்கையுடன் சென்னைக்கு வரவேண்டாம்
இன்ஜி., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இந்த ஆண்டு முதல் ஆன்லைனில் மட்டுமே நடத்தப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இனி, மாணவர்களும், பெற்றோரும், பெட்டி, படுக்கையுடன், சென்னைக்கு வர தேவையில்லை.
அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள, 550 இன்ஜி., கல்லுாரிகளில், தமிழக அரசின் சார்பில், பொது கவுன்சிலிங் நடத்தி, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஒற்றை சாளர முறையில் நடக்கும் இந்த கவுன்சிலிங்கில், மாணவர்களின் மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில், தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
இதற்காக, சென்னையில் அண்ணா பல்கலை வளாகத்தில், கவுன்சிலிங் மையம் அமைக்கப்பட்டு, மாணவியர், அவர்களின் பெற்றோர் தங்குவதற்கு, இலவச விடுதி வசதி செய்யப்படும். மாணவர்கள் மற்றும் அவர்களுடன் வரும் ஒரு நபருக்கு, அரசு பஸ்சில் சென்னைக்கு வர, இலவச கட்டண சலுகை தரப்படும்.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, ஆன்லைனுக்கு மாற்றப்படுகிறது. இதை, உயர்கல்வி அமைச்சர், அன்பழகன், நேற்று உறுதி செய்தார். இதற்கான ஏற்பாடுகள், முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அவர் கூறினார்.
அண்ணா பல்கலையின் கணினி அறிவியல் துறை தலைவரும், ராமானுஜன் கணினி மைய இயக்குனருமான, பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ், கவுன்சிலிங் கமிட்டி உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில், கவுன்சிலிங் பணிகள் நடந்து வருகின்றன. ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ள மாணவர்களின் வசதிக்காக, 32 மாவட்டங்களிலும், கவுன்சிலிங் உதவி கணினி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்த மையங்களில், கணினியுடன், உயர்தர இணையதள வசதி செய்யப்பட்டிருக்கும். மாணவர்கள் அங்கு சென்று, சேர்க்கையில் பங்கேற்கலாம். மேலும், வீட்டில் இணையதளத்துடன் கூடிய, கணினி வசதியுள்ள மாணவர்கள், வீட்டில் இருந்தவாறே கல்லுாரியையும், பாட பிரிவையும் தேர்வு செய்யலாம்.
கவுன்சிலிங் மையத்தில், தனியார் கல்லுாரி தரகர்கள் முகாமிட்டு, மாணவர்களை தங்கள் கல்லுாரிகளில் சேர வைக்கும் பிரச்னைகளுக்கு, இனி இடம் இருக்காது. கவுன்சிலிங்கிற்காக, அண்ணா பல்கலையில் மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகளுக்கான செலவுகளும் குறையும் என, உயர்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.