பத்ம ஸ்ரீ விருது பெற்ற 98 வயது ‘யோகா’ நானம்மாள்: 100 வயதைக் கடந்தாலும் பயிற்சியை கைவிடமாட்டேன் என உறுதி
90 ஆண்டுகளுக்கும் மேலாக நாள்தவறாது யோகா பயிற்சி செய்வதுடன், 600-க்கும் மேற்பட்ட யோகா மாஸ்டர்களை உருவாக்கியுள்ளவர் தற்போது பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ள 98 வயது நானம்மாள்.
கோவை கணபதி பாரதி நகரில் ஓசோன் யோகா மையம் என்ற பெயரில் யோகா பயிற்சிக் கூடத்தை 1971-ம் ஆண்டுமுதல் நடத்தி வருகிறார் நானம்மாள். பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன்காளியாபுரத்தைச் சேர்ந்தவர் இவரது தந்தை ரங்கசாமி. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள், யோகா, சிலம்பம் உள்ளிட்ட கலைகளில் பாரம்பரியமாக ஈடுபட்டுள்ளனர். தாத்தா, பாட்டி, அப்பா ஆகி யோர் யோகாசனம் செய்வதைப் பார்த்த நானம்மாள், சிறு வயதில் இருந்தே யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இவரது கணவர் வெங்கடசாமி. நெகமம் பகுதியைச் சேர்ந்த இவர் சித்த வைத்தியர். 1939-ல் இவர்களுக்கு திருமணமாகியுள்ளது. இவர்களது 4 மகள், 2 மகன்களில் தற்போது 5 பேர் உள்ளனர். மேலும் 12 பேரன்கள், 11 கொள்ளுப்பேரன், பேத்திகள் என எல்லோருக்குமே யோகாவைக் கற்றுத் தந்துள்ளார் நானம்மாள்.
1971-ல் பாரதி நகரில் ஓசோன் யோகா மையத்தை தொடங்கியுள்ளனர். இவரது குடும்பத்திலேயே 36 பேர் யோகா மாஸ்டர்களாக திகழ்கின்றனர். 600-க்கும் மேற்பட்டோரை நானம்மாள் யோகா மாஸ்டர்களாக உருவாக்கியுள்ளார். அவரிடம் யோகா கலையைக் கற்றவர்கள், இந்தியா மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் யோகா பயிற்சி மையங்களை நடத்தி வருகின்றனர்.
மேலும், பல்லாயிரக்கணக்கானோருக்கு யோகா பயிற்சியும் அளித்துள்ளார். 150 விருதுகள், 6 தேசிய அளவிலான தங்கப் பதக்கம், 2014-ல் கர்நாடக அரசின் யோக ரத்னா விருது, 2017 மார்ச் 8-ம் தேதி அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் பெண் சக்தி விருது என விருதுகளைக் குவித்துள்ள நானம்மாளுக்கு, தற்போது பத்ம ஸ்ரீ விருது அறிவித்துள்ளது மத்திய அரசு.
கரு உருவாக்கலுக்கு யோகா
‘‘அதிகாலை 5 மணிக்கு எழுந்துவிடுவேன். 6 மணி முதல் 7 மணி வரை யோகா வகுப்பு. பின்னர், சிறுதானிய கஞ்சி, ஏதாவது ஒரு பொரியல், மதியம் அரிசி சாதம், இரவு பாலும், ஏதாவது ஒரு பழமும்; இவைதான் என் உணவு. டீ, காபி, வெள்ளை சர்க்கரை ஆகாது. தினமும் ஒரு கீரையை கட்டாயம் சேர்த்துக்கொள்வேன்.
ஒருபோதும் ஆங்கில மருத்துவத்தை நாடியதில்லை. சளி, தலைவலி வந்தால் துளசி மற்றும் மூலிகை வைத்தியம்தான். எங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் ஆங்கில வைத்தியத்தை நாடுவ தில்லை.
முன்பெல்லாம் பெண்களுக்கு உடல் உழைப்பு அதிகம் இருந்தது. இதனால் எத்தனை குழந்தைகள் பெற்றாலும், சுகப்பிரசவம்தான். தற்போது மிக்ஸி, கிரைண்டர், வாஷிங்மிஷின் என எல்லாவற்றுக்கும் இயந்திரங்கள் வந்ததால், உழைப்புக்கு இடமே இல்லாமல் போய்விட்டது. அதனால்தான் ஆயிரக்கணக்கில் செலவை ஏற்படுத்தும் சிசேரியன் தேவைப்படுகிறது. மேலும், கரு உருவாக்கல் மையங்களும் அதிகரித்து வருகின்றன. இவற்றுக்கெல்லாம் யோகாதான் சரியான தீர்வு.
தற்போதும் என்னால் ஊசியில் நூலைக் கோர்க்க முடிகிறது. காது நன்றாகக் கேட்கிறது. நினைவாற்றலும் குறையவில்லை. உடல், மனம், அறிவு, உணர்வு ஆகியவற்றை சமநிலையில் வைத்திருக்க யோகா பயிற்சி உதவுகிறது.
உலக அளவில் அமெரிக்காவைச் சேர்ந்த தாவே என்ற பெண்ணும், நானும் மட்டுமே 98 வயதில் யோகா செய்து வருகிறோம். ஆரம்பத்தில் 50-க்கும் மேற்பட்ட ஆசனங்கள் செய்வேன். தற்போது பச்சிமோத்தாசனம், வஜ்ராசனம், சசாங்காசனம், அர்த்தசிரசாசனம், பாதஹஸ்தாசனம் உள்ளிட்ட 10 ஆசனங்கள் செய்கிறேன்.
வெளிநாடுகளில் அழைப்பு
எனக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தக் கலையை இன்னும் பல்லாயிரக்கணக்கானோரிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்பதே என் லட்சியம். 100 வயதைக் கடந்தாலும் யோகா பயிற்சி அளிப்பதைக் கைவிட மாட்டேன். யோகா, இயற்கை மருத்துவம், உபவாசத்தைக் கைக்கொள்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாகவும், மனதை தெளிவாகவும் வைத்திருக்கலாம்’’ என்று நம்பிக்கை ஊட்டுகிறார் நானம் மாள்.
2003-ல் அந்தமானில் நடந்த தேசிய அளவிலான யோகா போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள நானம்மாளுக்கு, வரும் மே மாதம் துபாய் தமிழ்ச் சங்கம் விருது வழங்கி கவுரவிக்க உள்ளது.
மேலும், அமெரிக்காவில் நடைபெற உள்ள சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்று, யோகாசனங்கள் செய்யவும் இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவரது மகன் பாலகிருஷ்ணனும் யோகா பயிற்சி மூலம் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது