இலவச பஸ் பாஸ் தொடரும் : தமிழக அரசு திட்டவட்டம்
'பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் தொடர்ந்து வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும், அரசு கல்லுாரி மாணவர்களுக்கும், அரசு போக்குவரத்து கழகங்களின் பஸ்களில், இலவசமாக பயணிக்க பாஸ் வழங்கப்படுகிறது. தனியார் கல்லுாரி மாணவர்களுக்கு, பஸ் கட்டண அடிப்படையில், 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
முதல் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும், அனைத்து மாணவர்களுக்கும், 23 லட்சம் இலவச பஸ் பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சலுகை, பஸ் கட்டணம் மாற்றி அமைத்த பின்னும், தொடர்ந்து வழங்கப்படும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அரசு பாலிடெக்னிக் கல்லுாரி, அரசு ஐ.டி.ஐ., நிறுவனங்கள் ஆகியவற்றில் படிக்கும், 2.78 லட்சம் மாணவர்களுக்கும், பஸ் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்ட பின்னும், தொடர்ந்து இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.
தனியார் கல்லுாரிகளில் படிக்கும், 3.21 லட்சம் மாணவ - மாணவியருக்கு, 50 சதவீத கட்டண சலுகையுடன் கூடிய பஸ் பாஸ், பழைய கட்டணம் அடிப்படையில், தொடர்ந்து வழங்கப்படும்.
இதற்கான செலவை ஈடுசெய்ய, 2017 - 18ம் ஆண்டில், 541 கோடி ரூபாயை, போக்குவரத்துகழகங்களுக்கு, அரசு வழங்கியுள்ளது.
மேலும், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமம் கருதி, ஏற்கனவே இருந்த, சாதாரண மற்றும் விரைவு பஸ்களுடன் கூடுதலாக, 498 விரைவு மற்றும் சொகுசு பஸ்களை, சாதாரண மற்றும் விரைவு கட்டண பஸ்களாக, அரசு மாற்றியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது