புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சென்னையில் இன்று உண்ணாவிரதம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
இது தொடர்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ கிராப் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.சண்முகராஜன், பெ.இளங்கோவன் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
அரசு ஊழியர்களுக்குப் பாதகமான புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 7-வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்ட காலத்தை கணக்கிட்டு 21 மாத கால நிலுவைத்தொகையை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இதுவரை 2 கட்டங்களாக போராட்டம் நடத்தியுள்ளோம்.
ஆனாலும் எங்கள் கோரிக்கையை அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. எனவே 3-வது கட்டமாக, அதே 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லம் அருகே சனிக்கிழமை (இன்று) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகிறோம். இதில், தமிழகம் முழுவதும் இருந்தும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களும் கலந்துகொள்கிறார்கள்.
இந்த போராட்டத்தை இந்து மஸ்தூர் சபா அகில இந்திய தலைவர் சி.ஏ.ராஜா ஸ்ரீதர் தொடங்கி வைக்கிறார். ஜாக்டோ ஜியோ கிராப் கூட்டமைப்பின் தலைவர்கள் கோரிக்கைகளை விளக்கிப் பேசுகிறார்கள். பன்னாட்டு பொது தொழிற்சங்க கூட்டமைப்பின் தெற்காசிய செயலாளர் இரா.கண்ணன் போராட்டத்தை முடித்துவைத்து உரையாற்றுகிறார். இவ்வாறு அவர் கள் கூறினர். பேட்டியின்போது கூட்டமைப்பின் அனைத்து தலைவர்களும் உடனிருந்தனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 25 ஆயிரம் பேர் கலந்துகொள்வார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், தமிழகம் முழுவதும் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ப இருப்பதாகவும், இப்போராட்டம் மிகப்பெரிய அளவில் அமைந்திருக்கும் என்றும் கூட்டமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.