பட்டதாரிகளின் அறிவாற்றல் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுவதில்லை: குடியரசு தலைவர் ஆதங்கம்
ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களின் பயின்றவர்கள், தங்களது அறிவாற்றலை நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுவதற்குப் பதிலாக பன்னாட்டு நிறுவனங்களின் வணிக மேம்பாட்டுக்குப் பயன்படுத்துகின்றனர் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் தரமான ஆராய்ச்சிப் பணிகளை ஊக்குவிப்பதுடன், அறிவு மேம்பாட்டு மையமாக பல்கலைக்கழகங்கள் திகழ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 4 நாள் சுற்றுப்பயணமாக வங்கதேசம் சென்றுள்ள பிரணாப் முகர்ஜி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதன் ஒரு பகுதியாக டாக்காவில் அமைந்துள்ள சிட்டகாங் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவர் செவ்வாய்க்கிழமை கலந்துகொண்டார். அப்போது, மாணவர்களிடையே அவர் பேசியதாவது:
சர்வதேச அளவில் பொருளாதாரச் சூழல் சுணக்கமடைந்து வருகிறது. இதனால், வளர்ந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியானது சரிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இத்தகைய நிலையில், வங்கதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7 சதவீதத்தை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இதன் மூலம் வங்கதேசம் அதிவேக வளர்ச்சியடைந்து வருவதை உணர முடிகிறது.
இந்தியாவும் அத்தகைய நிலையில்தான் கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. உலகளாவிய நிதிச் சூழல் மந்தமடைந்தாலும், அது இந்தியப் பொருளாதாரத்தில் எதிரொலிப்பதில்லை. சமூக பொருளாதார மாற்றங்களிலும் சரி; ஜனநாயக மேம்பாட்டிலும் சரி, இந்தியாவும், வங்கதேசமும் முன்னேற்றமடைந்து வருவதை நிரூபித்துள்ளன.
அதவேளையில் மற்றொரு புறம் கல்வி சார்ந்த விஷயங்களை எண்ணிப் பார்க்கும்போது, சில வருத்தங்கள் மேலோங்குகின்றன. ஒருகாலத்தில் இந்தியாவின் அறிவுப் பெட்டகங்களாக விளங்கிய நாளந்தா மற்றும் தட்சசீலம் பல்கலைக்கழகங்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தன. தற்போதும் அதே நிலையை பல்கலைக்கழகங்கள் உருவாக்க வேண்டும். இந்தியாவின் நிதியமைச்சராக இருந்தபோது, பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான நிதியை ஒதுக்குவேன். ஆனால், அவற்றின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கான அதிகார வரம்பு குறைந்த அளவே எனக்கு இருந்தது.
அதன் பின்னர் நாட்டின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு நாட்டின் முக்கியமான100 பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் அவற்றின் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.
ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் அளப்பரிய திறனுடன் தங்களது மாணவர்களை உருவாக்குகிறது. ஆனால், அவர்களோ தங்களது அறிவாற்றலை நாட்டின் மேம்பாட்டுக்காக செலவிடாமல், பெரு நிறுவனங்களின் விற்பனைப் பிரிவில் பிரதிநிதியாக பணியில் சேருகின்றனர் என்றார் குடியரசு தலைவர்