ஆதாரால் தனிநபர் ரகசியம் பறி போகும் பிரச்னைக்கு... மாற்று அடையாள எண் வழங்கும் திட்டம் அறிமுகம்
தனிநபர் சுதந்திரம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வாக, மாற்று அடையாள எண்களை, 'ஆதார்' இணையதளத்தில் இருந்து உருவாக்கிக் கொள்ளும் முறையை, ஆதார் அடையாள அட்டை ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது. இவ்வாறு உருவாக்கப்படும் மாற்று அடையாள எண்களை, மொபைல் போன், 'சிம் கார்டு' பெறுவதற்கான, அடையாளம் சரிபார்ப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
நாடு முழுவதும், 120 கோடி பேருக்கு, ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. இதில், தனிநபரின் கைரேகைகள், கருவிழி ரேகை மற்றும் முகவரி உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றிருக்கும். இவ்வாறு வழங்கப்படும் அடையாள அட்டைகளால், தனிநபரின் சுதந்திரம், ரகசிய தகவல்கள் கேள்விக்குறியாகி உள்ளதாக, சமூக ஆர்வலர்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்து உள்ளனர்.
ஆதார் தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளதாக, அமெரிக்காவைச் சேர்ந்த, 'விக்கி லீக்ஸ்' இணையதள நிறுவனர், எட்வர்டு ஸ்நோடென், சமீபத்தில் எச்சரித்திருந்தார்.இந்நிலையில், தனிநபர் சுதந்திரம், ரகசிய தகவல்கள் கசியும் அபாயம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வாக, 'விர்ச்சுவல்'எனப்படும், 16 இலக்க எண்கள் உடைய, மாற்று அடையாள எண்ணை, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும்,
ஆதார் அடையாள அட்டை ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.இதை, ஆதார் ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து, 'டவுன்லோடு' செய்ய முடியும். இந்த மாற்று எண்ணை, மொபைல் போன், 'சிம் கார்டு'க்கான அடையாள சரிபார்ப்பு உள்ளிட்ட தேவைகளுக்கு பயன்படுத்தமுடியும்.
இந்த மாற்று அடையாள எண் இருந்தால், ஆதாரில் உள்ள, 12 எண்களை சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. இந்த குறியீட்டில், தொடர்பின்றி உருவாக்கப்படும், 16 இலக்க எண்கள், சம்பந்தப்பட்ட நபரின், 'பயோ மெட்ரிக்' தகவல்களுடன் இடம் பெறும்.
மொபைல் போன் சேவை நிறுவனம் போன்றவை, இந்த அடையாள எண் மூலம், விண்ணப்பதாரரின் பெயர், விலாசம், புகைப்படம் உள்ளிட்ட, சரிபார்ப்புக்கு தேவையான தகவல்களை மட்டுமே பெற முடியும்.
இத்திட்டத்தின் பயனாளர், எத்தனை முறை வேண்டுமானாலும், மாற்று எண்ணை உருவாக்க முடியும். புதிய குறியீடு உருவாக்கப்பட்ட உடன், பழைய குறியீடு, தானாகவே ரத்தாகி விடும்.இத்திட்டம், மார்ச், 1 முதல் அமலுக்கு வருகிறது. இருப்பினும், ஜூன், 1 முதல், வங்கி, மொபைல் போன் சேவை உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும், மாற்று அடையாள எண்ணை ஏற்றுக் கொள்வது, கட்டாயம் ஆக்கப்படுகிறது.
'வீடில்லாதோரிடம் ஆதார் கேட்பதா?'
உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மதன் லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, பொதுநல வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தாவிடம் கூறியதாவது: நாடு முழுவதும், தங்குவதற்கு வீடின்றி, லட்சக் கணக்கான ஏழைகள் உள்ளனர்.
முகவரி என்று எதுவுமில்லாத இந்த ஏழைகளுக்கு, மத்திய அரசு, எவ்வாறு ஆதார் அட்டைகளை வழங்கப் போகிறது? வீடின்றி, தெருக்களில் உறங்கும் ஏழைகளிடம், குளிர் காலத்தில், இரவில் தங்கும் விடுதிகளில் அனுமதிக்க, ஆதார் கேட்கப்படுவதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், வீடில்லாதோர், இரவில் தங்குவதற்கான இல்லங்கள் கட்டப்பட வேண்டும். இதற்கான கட்டுமான பணிகளை, முதன்மை செயலர் தலைமையிலான, மூன்று நபர் குழு கண்காணிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்
தேவையான தகவல் அளிக்கலாம்
'லிமிடெட், கே.ஒய்.சி.,' எனப்படும், வாடிக்கையாளர்களின் தகவல்களை தெரிந்து கொள்ளும் நடைமுறைக்கு, தேவைப்படும் தகவல்களை மட்டும் அளிக்கும் புதிய திட்டத்தை, ஆதார் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தில், மொபைல் போன் சேவை நிறுவனம் போன்றவை, எந்த தகவல்களை கேட்கிறதோ, அவை மட்டுமே தெரிவிக்கப்படும்