வாழ்க்கை முழுவதும் கற்றல் வேண்டும்! : -மாணவியருக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுரை
''பட்டம் பெறுவதுடன் கல்வி நிறைவடைவதில்லை; வாழ்க்கை முழுவதும் கற்றல் என்ற செயல்பாடு இருக்கவேண்டும்,'' என, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மாணவியருக்கு அறிவுரை கூறினார்.
கோவை அவினாசிலிங்கம் உயர்கல்வி நிறுவனத்தின், 29வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற, மத்திய அமைச்சர், நிர்மலா சீதாராமன், மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது: தமிழகத்தில், கல்விக்கு, குறிப்பாக பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவது மகிழ்ச்சியானது. கடந்த காலங்களில், பெண் குழந்தைகள் பிறந்தாலே, திருமணத்திற்கு பணத்தை சேமிக்க துவங்கிவிடுவர். தற்போது, கல்விக்கு என சேமிக்கின்றனர்.
கல்வியை, சேவை மனப்பான்மையுடன் வழங்கும் நிறுவனங்களுக்கு, பல்வேறு தடைகள் ஏற்படுகின்றன. இத்தகைய கல்வி நிறுவனங்களுக்கு, அனைத்து உதவிகளும் கிடைக்க பல்கலை மானியக்குழு வழிவகை செய்யவேண்டும். நன்கொடைகள் வாங்காத, சேவை மனப்பான்மை கொண்ட நிறுவனங்களை விரிவுபடுத்தவும், ஊக்கப்படுத்தவும், முன்வரவேண்டும். கல்வி நிறுவனங்களில் நன்கொடை என்பதற்கு இடமில்லாத வகையில், தெளிவான விதிமுறைகளை வரையறை செய்யவேண்டும். கல்வியின் தரத்தை மேம்படுத்தி, நல்ல கல்வி நிறுவனங்களுக்கு உதவும் வகையில், தெளிவான விதிமுறைகள் வகுக்கப்படவேண்டும். மாணவர்களுக்கு, பட்டம் பெறுவதுடன் கல்வி என்பது நிறைவடைவதில்லை. வாழ்க்கை முழுவதும் கற்றல் என்ற செயல்பாடு இருக்க வேண்டும். ஒழுக்கம், பணிவு, அறிவு போன்ற தன்மைகளை கொடுப்பதே தரமான கல்வி. பணிவும் கல்வியும் ஒருங்கிணைந்து இருபவர்களை மட்டுமே, நல்ல மனிதர்களாக அடையாளம் காணமுடியும். இவ்வாறு, அவர் பேசினார்.இதில், முனைவர் மற்றும் முதுநிலை, இளநிலை பிரிவுகளில், 1,799 மாணவியருக்கு பட்டங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ராணுவ தளவாட பூங்கா : கோவை வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை, விமான நிலையத்தில், தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி வரவேற்றார்.
அப்போது, 'கோவை மாவட்டத்தில், ராணுவ பாதுகாப்பு தளவாடங்களுக்கான உதிரி பாகங்கள் தயார் செய்யும் தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரி மனு அளித்தார்.
பின், அமைச்சர் வேலுமணி கூறியதாவது: கோவையில் இயந்திரங்கள், ஆட்டோ மொபைல், உதிரிபாகங்கள், ஸ்டீல் மற்றும் பம்ப்செட் உற்பத்தி தொழில்கள் அதிக அளவில் உள்ளன.
கோவையில், மத்திய அரசின் சார்பில், தேசிய முதலீடு உற்பத்தி மையம் அமைக்கவும், 'மேக் இன் இந்தியா' திட்டம் போல, 'மேக் இன் கோயமுத்துார்' என்ற நிலை உருவாக்கும் வகையில், ராணுவ தளவாட உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழில் பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு, தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி தினமலர்