சாதிக்க ஊனம் தடையில்லையாம்.. பாரா ஒலிம்பிக்கை குறிவைக்கும் இளைஞர்
பாரா ஒலிம்பிக் போட்டிக்கான தேர்வில் வெற்றி பெற, பெரம்பலுாரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
பெரம்பலுார் மாவட்டம், மேலப்புலியூர் கிராமத்தை சேர்ந்த வனிதா - சுப்ரமணி தம்பதியின் மூத்த மகன் கலைச்செல்வன், 34. மாற்றுத்திறனாளியான இவர் 2020ம் ஆண்டு நடக்கும் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கபயிற்சி பெற்று வருகிறார்.
இம்மாத இறுதியில், மதுரை எம்.ஜி.ஆர்., ஸ்டேடியத்தில் தேசிய அளவிலான தேர்வு முகாம் நடக்கிறது. இதில், பங்கேற்று தேர்வு ஆவதற்காக கலைச்செல்வன் தற்போது பயிற்சி பெற்று வருகிறார்.
இதற்காக, தற்போது, மேலப்பூலியூரிலிருந்து, 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரம்பலுாருக்கு தினமும் சைக்கிளிலில் பயணித்து பயிற்சி எடுத்து வருகிறார். இதுமட்டுமல்லாமல், 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியிலும் பங்கேற்க திட்டமிட்டுள்ள இவர், பெரம்பலுார் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் ஓடி பயிற்சி பெற்று வருகிறார்.
இதுகுறித்து கலைச்செல்வன் கூறியதாவது:எனக்கு திருமணமாகி சத்யா என்ற மனைவி உள்ளார். 13 வயதில் லாரியில் கிளீனராக வேலை பார்த்தபோது, விபத்துல சிக்கி ஒருகை பறிபோனது. ஒன்றரை வருட சிகிச்சைக்கு பின் தேறினேன். வறுமை காரணமாக தினமும் வேலை தேடி, 40 கிலோமீட்டர் நடந்து செல்வேன்.
விளையாட்டிலும் எதாவது சாதிக்க வேண்டும் என்று வெறி வந்தது. இதையடுத்து ஓட்டம், நீச்சல் ஆகிய பயிற்சி எடுத்தேன். கடந்த, 2008ம் ஆண்டிலிருந்து ஓட்டம், சைக்கிள், நீச்சல்னு மாநில, தேசிய அளவிலான போட்டிகள்ல கலந்துக்கிட்டேன்.
2011ம் ஆண்டு லண்டன் பாரா ஒலிம்பிக் போட்டியில் என்னால கலந்துக்க முடிஞ்சது. பதக்கம் வாங்கல. ஆனா அங்க 'பிளாக் பியரிங்' வாய்ப்பு எனக்குக் கிடைச்சதே பெருமையா நினைக்கிறேன். வரும், 2020ல் நடக்க உள்ள பாராலிம்பிக் போட்டியில் சைக்கிள், ஓட்டப்பந்தயம் ஆகிய போட்டிகளில் பங்கேற்று எனது சொந்த மண்ணுக்கு பெருமை சேர்ப்பேன். இதற்காக, நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் பயிற்சி எடுத்து வருகிறேன். அதற்கு அரசும் எனக்கு உதவினால் நிச்சயம் சாதிப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.