குழந்தைகளையும் விட்டு வைக்காத ஆதார்... சத்துணவு சாப்பிடுவதற்கும் ஆதார் கட்டாயம்
அங்கன்வாடிகளில் பயிலும் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை வழங்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, ஆதார் அட்டை இல்லாத குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்படமாட்டாது என அறிவித்துள்ளது. பிறப்பிலிருந்து இறப்பு வரை அனைத்திலும் ஆதார் கார்டை கட்டாயமாக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது குழந்தைகளையும் இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பேசிய மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை இணை அமைச்சர் வீரேந்திர குமார், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஏழை எளிய மக்கள் மற்றும் சாமானியர்களின் குழந்தைகள் படித்து வரும் அங்கன்வாடிகளில் ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே உணவு வழங்கப்படும் என்ற திட்டத்தை விரைவில் அரசு கொண்டு வரவுள்ளது. அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை வழங்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருவது. விரைவில் இதுதொடர்பான புதிய ஆணை வெளியாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஆதார் அட்டை வழங்கப்படும் வரை பிற அடையாள அட்டைகளை காட்டி குழந்தைகள் சத்துணவு மற்றும் சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம். சத்துணவில் நடைபெறும் முறைகேடுகளையும், போலி பதிவுகளையும் கண்டறியவே இந்த நடவடிக்கை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.