ஒவ்வொரு பள்ளியிலும் உளவியல் நிபுணரை நியமிக்க வேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை ஷெனாய் நகரில் உள்ள மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், வேதியியல் ஆசிரியராக பணியாற்றியவர் கனகராஜ். இவர், 12-ம் வகுப்பு மாணவிகள் படிக்காததால் அவர்களை திட்டி, அடித்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய தலைமை ஆசிரியர் தலைமையிலான விசாரணை குழு, ஆசிரியர் கனகராஜூக்கு 3 ஆண்டு ஊதிய உயர்வை நிறுத்தியும், அவரை நுங்கம்பாக்கம் மாநகராட்சி பள்ளிக்கு இடமாற்றம் செய்தும் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கனகராஜ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி எம்.வி.முரளிதரன் விசாரித்தார். பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
ஆசிரியருக்கு எதிரான குற்றச்சாட்டை உயர் அதிகாரிகளும் அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்கள் சுயமாக பரிசீலிக்கவில்லை. மாணவிகளை அசிங்கமான வார்த்தைகளால் திட்டி அடித்தாக ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், அந்த அசிங்கமான வார்த்தை என்ன? என்ற விவரங்கள் இல்லை. புகார் செய்த மாணவிகளும், விசாரணையின்போது, ஆசிரியருக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். அந்த ஆசிரியர் தங்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் மனுதாரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எனவே, மனுதாரருக்கு 3 ஆண்டு ஊதிய உயர்வை ரத்துசெய்து பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்கிறேன். அவருக்கு வழங்க வேண்டிய அனைத்து பண பலன்களையும் வழங்கவேண்டும்.
அண்மை காலங்களில், ஆசிரியர்கள் கண்டித்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகம் நடைபெறுகிறது. சின்ன ஏமாற்றம், அவமானத்தை கூட தாங்க முடியாத நிலையில் உள்ள மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.
எனவே, பள்ளி கல்வித்துறை இயக்குனர் தலைமையில் மாநில அளவில் ஒரு குழுவை தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளர் அமைக்க வேண்டும். இந்த குழு, எந்த வகையில் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஆய்வு செய்யவேண்டும்.
மேலும் ஒவ்வொரு பள்ளியிலும், ஒரு உளவியல் நிபுணரை தமிழக அரசு நியமிக்க வேண்டும். உளவியல் நிபுணர், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு ‘கவுன்சிலிங்’ வழங்க வேண்டும். இந்த வழக்கை அடுத்த ஆண்டு ஏப்ரல் 9-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அன்று இது தொடர்பான விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.