ஆதார் இணைப்பு அவசியமா? உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு
அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் எண்ணை இணைப்பது அவசியமா? என்பது குறித்து உச்ச நீதிமன்றம் அரசியல்சாசன அமர்வு வெள்ளிக்கிழமை இடைக்கால உத்தரவு பிறப்பிக்க இருக்கிறது.
பொதுமக்கள், சமையல் எரிவாயு மானியம் உள்ளிட்ட பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, இது தொடர்பாக வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் உத்தரவு பிறப்பிக்கப்படும். மேலும், செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை 2018 பிப்ரவரி 6-ஆம் தேதியில் இருந்து மார்ச் 31-ஆம் தேதிக்கு நீட்டிப்பது குறித்தும் அப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, பான் கார்டு, வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை 2018 மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், செல்லிட்டப்பேசி எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு 2018 பிப்ரவரி 6-ஆம் தேதி என்பதில் மாற்றம் செய்யப்படவில்லை.
ஆதார் திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வரும் ஜனவரி 17-ஆம் தேதி தொடங்குகிறது.