தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை
தமிழகத்தில் ஜவாஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளைத் தொடங்குவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக நாகர்கோவிலைச் சேர்ந்த குமரி மகா சபாவின் செயலாளர் ஜெயக்குமார், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 'கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு தொடங்கியுள்ள ஜவாஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் மாநில மொழி, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி கற்பிக்கப்படுகின்றன. தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்காததால், இப்பள்ளிகளை இங்கு தொடங்க முடியவில்லை. எனவே, தமிழகத்தில் ஜவாஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளைத் தொடங்க உத்தரவிட வேண்டும்' என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் 'தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா வித்யாலயா பள்ளிகளை அமைப்பதற்கான இடங்களை கண்டறிய வேண்டும். மாணவர்கள் சேர்க்கை 2018, ஜனவரியில் தொடங்கும் என்பதால், 2018-19 கல்வியாண்டுக்காக, மாவட்டம் தோறும் 240 மாணவர்கள் பயிலும் வகையில் தாற்காலிக இடத்தையும், கட்டடத்தையும் தமிழக அரசு 2 மாதங்களுக்குள் வழங்க வேண்டும். தடையில்லாச் சான்றை தமிழக அரசு 8 வாரங்களில் வழங்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேல்முறையீடு: இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏழாவது அட்டவணையின் மூன்றாவது பட்டியலின்படி, பள்ளிக் கல்வி தொடர்பான சட்டங்களை இயற்றுவதும், கொள்கைகளை வகுப்பதும் மாநில அரசுகளின் தனி உரிமையாகும். இதுபோன்ற மாநில அரசின் உரிமைகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது. தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம்-2006-இன் படி, தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு தமிழ் மொழி கட்டாயப் பாடமாக போதிக்கப்பட்டு வருகிறது. இச்சட்டத்தின் விதிகள் தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளுக்கும் பொருந்தும் என அரசாணை 2014-ஆம் ஆண்டு பிறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம்-2006-இன் படி, தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் நவோதயா பள்ளிகளில் பிராந்திய மொழி, ஆங்கிலம், ஹிந்தி என மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது. இது தமிழக அரசின் கல்விக் கொள்கைக்கும், தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம்-2006-இல் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களுக்கும் எதிராக இருப்பதால் தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மேல்முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தடை: இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏம்.எம். கான்வில்கர், டி. ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் அரிமா சுந்தரம், சுப்ரமணிய பிரசாத் ஆகியோர் ஆஜராகி, 'தமிழகத்தில் இருமொழிக் கொள்கையின் அடிப்படையில் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் கற்பிக்கப்பட்டு வருகிறது.
ஓசூர் போன்ற கர்நாடகத்தின் அண்டை பகுதிகளில் கன்னடமும் பயிற்றுவிக்கப்படுகிறது. தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதிலும், தாய்மொழியை யாரும் மறத்தல் கூடாது என்பதிலும் மாநில அரசு கவனமாக உள்ளது. இதற்காகத்தான் தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் இயற்றப்பட்டு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, நவோதயா வித்யாலயா பள்ளிகளை திறப்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு தமிழக சட்டத்துக்கு எதிராக உள்ளது' என்றனர்.
இதையடுத்து, வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இது தொடர்பாக எதிர் மனுதாரர் 11 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.