பாரதி இல்லையேல் தமிழும் இல்லை!
பாரதியார் பிறந்தநாள் இன்று. அவருடன் நெருங்கிப் பழகிய இருவரின் அனுபவத்தை படித்தால், அவரை நேரில் பார்த்த உணர்வு ஏற்படும்.
'தினமணி' நாளிதழின், முன்னாள் ஆசிரியர், டி.எஸ்.சொக்கலிங்கம் ஒரு பேட்டியில் கூறியது:
கடந்த, 1919ம் ஆண்டு ஆரம்பத்தில் தான், முதன் முதலில் நான் பாரதியாரைப் பார்த்தேன். அச்சமயம் தான், அவர், புதுச்சேரியை விட்டு வெளியே வந்தார். என் சகோதரரும், அவரும் நண்பர்களானதால், புதுச்சேரியை விட்டு பாரதியார் வெளியே வந்ததும், சில தினங்கள், எங்கள் வீட்டில் வந்து தங்கினார்.
பாரதியார், புதுச்சேரியில் இருந்தபோது, எழுதி வந்த கதை, கவிதை மற்றும் கட்டுரைகளையும் ஒழுங்காய் படித்து வந்தேன். அவர் நடத்தி வந்த, 'இந்தியா' என்ற பத்திரிகையில் வெளியான கருத்துப் படங்கள், என் மனதை பெரிதும் கவர்ந்தன.
பாரதியாரின் பெருமையைப் பற்றி பூரணமாய் அறியக்கூடிய வயது, அப்போது எனக்கு இல்லை. ஆனால், அவர் ஒரு பெரிய தேசபக்தர், புரட்சி வீரர் என்ற முறையிலேயே, அச்சமயம் அவரைக் கருதினேன். எனக்கு ஒரு பாட்டு எழுதிக் கொடுக்கும்படி, அவரிடம் கேட்டேன்.
மறுபேச்சு பேசாமல், ஒரு காகிதத்தை எடுத்து, தன் மணி மணியான எழுத்துக்களில், 'ஜெயமுண்டு பயமில்லை மனமே...' என்ற பாட்டை எழுதிக் கொடுத்தார். எதற்காக அந்தப் பாட்டைத் தேர்ந்தெடுத்தார் என, நான் கேட்கவில்லை. ஒருவேளை, அப்போது, என் வயதில் அந்தப் பாட்டு தான் எனக்கு அவசியம் என, அவர் நினைத்திருக்கலாம்.
பாரதியார், தம்மோடு ஒரு வேலைக்காரப் பையனையும் அழைத்து வந்திருந்தார். அவன் சொந்தப் பெயர் என்ன என்பது, எனக்கு ஞாபகமில்லை. பாரதியார் அவனுக்கு, சமத்துவம் என்று பெயரிட்டிருந்தார்.
ஒரு நாள், எங்கள் வீட்டில் பாரதியாரும், சில நண்பர்களும் பேசிக்கொண்டிருந்தனர். எல்லாரும், நாற்காலியில் அமர்ந்திருந்தனர். சமத்துவம், ஏதோ வேலையாகப் சென்றுத் திரும்பியவன், கீழே உட்கார்ந்தான்.
பாரதியார் அவனைப் பார்த்தார். 'அடே, சமத்துவம்... நாற்காலியில் உட்கார்...' என்றார். அவன் நாற்காலியில் உட்காரத் துணியவில்லை; நடுங்கினான். பாரதி எழுந்து அவனைத் துாக்கி, நாற்காலியில் உட்கார வைத்தார். அவர் அப்படிச் செய்தது, மற்றவர்களுக்கு வேடிக்கையாகத் தோன்றலாம்.
ஆனால், தம் கற்பனை உலகத்தில், எப்போதுமே லயித்துப் போயிருந்த பாரதிக்கு, அப்படித் தோன்றவில்லை. சமத்துவத்தை உருவகப்படுத்திய அவருடைய கவிதை உள்ளம், எல்லாருக்கும், எல்லா இடத்திலேயும் சமத்துவத்தையே கண்டது.
'ஸ்டார் கம்பெனி' என்ற பெயரில், நான் ஒரு கடை நடத்தி வந்தேன். ஒரு நாள் என் கடைக்கு வந்து, அங்குள்ள சரக்குகளைப் பாரதியார் பார்வையிட்டார். துணிகளைப் பார்த்த போது, 'தம்பி... இந்த துணியில், 'கோட்டு' தைத்தால் எனக்கு நன்றாய் இருக்கும்...' என்றார்.
'எதில் வேண்டுமானாலும் தைத்துக் கொள்ளுங்கள்...' என்று சொல்லி, தையல்காரரைக் கூப்பிட்டு, தைக்கும்படி சொன்னேன்.
அந்த கோட்டுகள், தென்காசியை விட்டு அவர் புறப்படுகிற வரையாவது, அவரிடம் இருந்தனவா என்பது தெரியாது. அவர் சுபாவம் அப்படி; யார் கேட்டாலும், கொடுத்து விடுவார்.
என் கடையில் அன்று பேசிக் கொண்டிருந்தபோது, 'தம்பி... எனக்கு ஒரு லட்ச ரூபாய் வேண்டும்...' என்றார் பாரதியார்.
'எதற்காக?' என்றேன்.
'என் கவிதைகளை அச்சிட்டு, புத்தகமாகப் போட வேண்டும். என் புத்தகங்களை, அமெரிக்காவில் அச்சிட வேண்டும். உலகத்திலேயே, அமெரிக்காவில் தான் சிறந்த முறையில் அச்சிடுகின்றனர்...'
'அப்படியே இருந்தாலும் அதற்கு ஒரு லட்ச ரூபாய் வேண்டியிருக்குமா?'
'ஐம்பது ஆயிரம் ரூபாய் அச்சுக் கூலி; இன்னும், 50 ஆயிரம் ரூபாய் சித்திரக்காரனுக்கு...'
'சித்திரக்காரன் எதற்கு?'
'என் பாட்டுகளுக்குச் சித்திரம் போட...'
அன்று, அவர் சொன்னது என் மனதில் பதிந்து போய் விட்டது. நான், பத்திரிகை உலகிற்கு வந்த பின், பாரதியார் பாடல்களுக்கு, எப்படியாவது சித்திரம் போட வேண்டும் என்றும் நினைத்தேன். 1925ல் வெளியான, 'தமிழ்நாடு' பொங்கல் மலரில், பாரதியார் பாட்டுக்கள் சிலவற்றுக்கு, சித்திரங்கள் போட ஏற்பாடு செய்தேன்.
அதற்குப் பின், தமிழகத்தில் அந்த முறை வேகமாய்ப் பரவியது. அதைப் பார்ப்பதற்கு, பாரதியார் உயிரோடு இல்லாவிட்டாலும், அவருடைய ஆத்மா திருப்தி அடையும் என, நினைக்கிறேன்.
கடந்த, 1939ல், வானொலியில் ஒலிபரப்பப்பட்ட உரையில், 'சுதேசமித்திரன்' இதழின் ஆசிரியர், சி.ஆர்.ஸ்ரீநிவாசன் பேசியது:
ஒரு நாள் காலை, 10:00 மணி இருக்கும். ஆபீசில் தபால் பார்த்துக் கொண்டிருந்தேன். கன வேகமாய் ஒரு ஜட்கா வண்டி, ஆபீசை நோக்கி வந்தது. ஆபீஸ் பெயரைப் பார்த்ததும், 'நிறுத்து...' என்று கூவினார், வண்டியிலிருந்தவர். நிற்கிற வரையில் தாங்கவில்லை. குறுக்கு கம்பியைத் தள்ளி, கீழே குதித்தார்.
தள்ளின கம்பி, திரும்பி வந்து, சொக்காயில் மாட்டிக் கொண்டது. அலட்சியமாகக் கையை உதறினார். சொக்காயின் கை கிழிந்து விட்டது; அதையும் கவனிக்கவில்லை. ஓடோடி உள்ளே வந்தார்.
நான் இருந்த அறைக்கு, குறுக்கு கதவுகள் இருக்கக் கண்டு, சற்று தயங்கினார். மெள்ள கதவைத் தட்டினார்; பதில் இல்லை. கதவுக்கு மேல் தலையை நீட்டி, உள்ளே பார்த்தார். என்னைக் கண்டதும், சிறிது லஜ்ஜைப் பட்டார்.
'யார்?' என்று நான் கேட்டேன்.
'நான் தான், சுப்பிரமணிய பாரதி...' என்றார்.
'வாருங்கள், உள்ளே வாருங்கள்; உட்காருங்கள்...' என்றேன்.
நடுத்தர உயரம்; ஒற்றை நாடி; மாநிறம் படைத்த மேனி; பிரிபிரியாய் சுற்றிய வால் விட்ட தலைப்பாகை; அகன்ற நெற்றி; அதன் மத்தியில், காலணா அளவு குங்குமப் பொட்டு. அடர்ந்த புருவங்கள், உருண்டை கண்களைக் காத்து வந்தன. நிமிர்ந்த நாசி, வாடின கன்னங்களை விளக்கிக் காட்டியது.
முறுக்கிய மீசை, மேல் உதட்டை மறைத்தும், உறுதியிழந்த உயிர்நிலையை, கீழ் உதடு காட்டியது. உடல் மீது பொத்தான் இல்லாத சட்டை; அதை மூட, ஒரு, 'அல்பகா கோட்' வண்டியிலிருந்து குதித்தபோது, அதுவும் கிழிந்து விட்டது.
நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்; நா எழவில்லை. கண்கள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன; அறையைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தன; என்னையும் ஏற இறங்கப் பார்த்தன. வெகுண்ட கண்கள்; வேதனை வடிந்த கண்கள்; சாந்தம் நிறைந்த கண்கள்; வசியம் மிகுந்த கண்கள்.
அவை, என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டன. அன்று, நான் பாரதிதாசனாக மாறினேன். பழகப் பழக, ேசம் பாசமாகவே மாறிற்று.பெரிய படிப்பாளி அல்ல; ஏட்டுப் படிப்பில் என்றைக்கும் நாட்டம் செல்லவில்லை. சென்னை வந்து சேர்ந்தார்; சுழலில் சிக்கிக் கொண்டார்.
அதிகார வர்க்கம் விழித்துக் கொண்டது; புதுச்சேரியில் மறைந்தார்; மனம் சோர்ந்தார். மறுமலர்ச்சி தோன்றிய பின் வெளிவந்தார்.
சென்னையிலும், புதுச்சேரியிலும் அவர் கடற்கரை செல்லாத நாள் கிடையாது. கரையில் உட்கார்ந்த வண்ணம், அலைகள் துள்ளித் தாவி, உருண்டு, திரண்டு, புரண்டு, நுரையும் நீருமாய்த் தாண்டவமாடுவதைக் கண்டு களித்தார்.
புதுச்சேரியில் புகுந்த பாரதி வேறு; புதுச்சேரியிலிருந்து வெளிவந்த பாரதி வேறு; உள்ளே சென்றவர் வீரர்; வெளியே வந்தவர் ஞானி. ஞானிகளுக்கு இருப்பிடம் இகத்தில் அல்ல; இரண்டு ஆண்டுகளுக்குள் அழைப்பு வந்து விட்டது. பூத உடல் நீத்தார்; புகழ் உடல் நிலைத்தது.
பாரதியின் கவிதையைப் பற்றியும், கற்பனையைப் பற்றியும், பலர் புகழ்ந்து கூறுகின்றனர். மொழிக்குப் பெருமையைத் தேடியதே, அவர் செய்த அரிய சேவை.
பதவியும், பொறுப்பும் படைத்த பெரியோர், தமிழ் மொழியில் பேசக் கூச்சப்பட்டனர்; குறைவென்றும் நினைத்தனர். பாரதி தோன்றுமுன் இருந்த நிலைமையை, இன்றைய நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். மாறுதலுக்கு முக்கிய காரணம், பாரதி. 'தமிழ், கானத்திற்கு இசைந்த மொழி; வல்லவர் ஆண்டால் ராகமும், தாளமும் தானாகக் கட்டும்' என்பதைப் பாரதி கண்டார்.
'இன்பம் தர, துன்பம் தீர, பயம் நீங்க, பலம் ஓங்க, வீரம் சுரக்க, தீரம் தெறிக்க, உள்ளம் உருக, ஊக்கம் பெருக, தமிழ்மொழி போல் தரணியில் காண்பது அரிது...' என்றார், பாரதி.
தமிழ்த்தாய்க்கு அவர் ஆற்றிய தொண்டே பெரியது. அதை அறிவுறுத்தவே, இன்று அவரைக் கொண்டாடுகிறோம்.
- ஆர்.சி.சம்பத்
நன்றி தினமலர்