விவசாயத்தின் மீது தீரா காதல்; ஐடி வேலையை உதறி ஆன்லைனில் கீரை விற்று அசத்தும் கோவை இளைஞர்!
ஆன்லைனில் கீரை விற்று, கோவை இளைஞர் ஒருவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
கோவையைச் சேர்ந்த ஸ்ரீராம் பிரசாத் ஐடி துறையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் விவசாயத்தின் மீது ஏற்பட்ட தீராத காதலால், ஐடி வேலையை உதறியுள்ளார்.
இதையடுத்து கீரை விற்கும் தொழிலில் இறங்கியுள்ளார். இதற்காக www.keeraikadai.in என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளார். மேலும் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் ஸ்டோரில் அப்ளிகேஷனையும் வெளியிட்டுள்ளார்.
அதில் சுமார் 40 வகையான கீரைகள் மற்றும் காய்கறிகளை விற்று வருகிறார்.
தனது சொந்தப் பண்ணையில் இருந்து மட்டுமின்றி, இருகூர், சூலூர், தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் இருந்தும் நேரடியாக விற்பனைக்கு எடுத்துக் கொள்கிறார்.
மேலும் விவசாயிகளின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அதிலும் கீரை உற்பத்தி செய்து வருகிறார்.
வருங்காலத்தில் 100 வகையான கீரைகளை விற்பனைக்கு கொண்டு வருவது மட்டுமின்றி, தென்னிந்திய அளவில் கடையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீராம் பிரசாத் தெரிவித்துள்ளார்.