4 மாணவியர் மரணத்திற்கு பின் பள்ளிக்கு 100 சதவீத வருகை
அரக்கோணம் அருகே, நான்கு மாணவியர் பலியான பனப்பாக்கம் பள்ளியில், மாணவியர் வருகை, 100 சதவீதமாகியுள்ளது.
வேலுார் மாவட்டம், அரக்கோணம் அடுத்த பனப்பாக்கம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 படித்த, நான்கு மாணவியர், ஆசிரியர் திட்டியதால் கடந்த மாதம், 24ல், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த பள்ளியில், 1,322 மாணவியர் படித்து வந்தனர். நான்கு மாணவியர் தற்கொலை சம்பவத்தையடுத்து, பயத்தால் மாணவியர் வருவது பாதியாக குறைந்தது.
இதையடுத்து, வேலுார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உளவியல் நிபுணர்கள் தலைமையில், மாணவியருக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.
இதனால், 1,290 மாணவியர் பள்ளிக்கு வந்தனர். அதேசமயம், தற்கொலை செய்து கொண்ட மாணவியருடன், பிளஸ் 1 படித்து வந்த, 32 மாணவியர் மட்டும் வரவில்லை.
இதையடுத்து, சென்னை குழந்தைகள் நலம் உளவியல் ஆலோசகர் யசோதா தலைமையிலான குழுவினர், பள்ளிக்கு வந்து மூன்று நாட்கள், 32 மாணவியருடன் பேசி, அவர்களுக்கு கவுன்சிலிங் அளித்தனர்.
அதேபோல், அவர்களது பெற்றோருக்கும் கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.
பின், அந்த மாணவியரும் நேற்று முதல் பள்ளிக்கு வரத்துவங்கினர். இதனால் பள்ளியில் மாணவியர் வருகை, 100 சதவீதமானது.