பாடத்திட்டம் குறித்த கருத்து : ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் ஆர்வம்
தமிழக பாடத்திட்டத்தை தரம் உயர்த்துவது குறித்து, ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் மற்றும், சி.பி.எஸ்.இ., பள்ளி நிர்வாகத்தினர், நிறைய கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தை மாற்றுவதற்கு, தமிழக அரசின் சார்பில், கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்தகிருஷ்ணன் தலைமையில், கலைத் திட்டக் குழு அமைக்கப்பட்டுஉள்ளது.
வரைவு அறிக்கை : மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யின் இயக்குனர், அறிவொளி ஒருங்கிணைப்பில், பாடத்திட்ட தயாரிப்பு மற்றும் புத்தகம் எழுதும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, பாடத்திட்ட வரைவு அறிக்கையை, நவ., 20ல், பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் மீது, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள், தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிப்போர், எஸ்.சி.இ.ஆர்.டி.,யின், www.tnscert.org என்ற இணையதளத்தில், கருத்துக்களை பதிவு செய்யலாம். இதுவரை, 7,500 கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.
அவற்றில், தேசிய உயர் கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., பேராசிரியர்கள், சி.பி.எஸ்.இ., பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகத்தினர், ஏராளமான ஆலோசனைகளை ஆர்வத்துடன் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் ஊக்கம் : சென்னை, மும்பை, கான்பூர், டில்லி உள்ளிட்ட, ஐ.ஐ.டி.,க்களில் இருந்து, பேராசிரியர்கள் கருத்து தெரிவித்திருப்பது, பள்ளிக் கல்வி அதிகாரிகளுக்கு, கூடுதல் ஊக்கத்தை அளித்துள்ளது. சில மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள், தங்களின் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் வாயிலாக, பாட வாரியாக ஆய்வு செய்து, புதிதாக சேர்க்க வேண்டிய அம்சங்களையும் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, பாடத்திட்ட தயாரிப்புக்கு முன்பும், பாடத்திட்ட வரைவு அறிக்கை மீதும், நமது நாளிதழ் சார்பில், பள்ளிக் கல்வித் துறைக்கு, ஏராளமான கருத்துக்கள் வழங்கப் பட்டுள்ளன.