புதிய காற்றழுத்த தாழ்வுநிலையால் வடதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மத்திய நீர்வள ஆணையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி வடகிழக்குப் பருவமிழை தொடங்கியது. தொடங்கியதுமே அதிரடி காட்டிய பருவமழை பின்னர் ஓய்வெடுக்க தொடங்கியது. வங்கக்கடலில் நேற்று உருவான ஓகி புயலால் தென் தமிழகம் நல்ல மழையை பெற்றது. இதனால் தென் மாவட்டங்களில் உள்ள ஆறுகள், அணைகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் நிரம்பி வழிகின்றன.
2 நாட்களில் வலுப்பெறும் இந்நிலையில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த தாழ்வுநிலை இன்னும் 2 நாட்களில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை மையம் கூறியது.
மீண்டும் நல்ல மழைக்கு வாய்ப்பு மேலும் அந்த வானிலை மையம் அடுத்த நான்கு நாட்களில் தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழகத்தை நோக்கி நகரும் என்றும் தெரிவித்தது. இதனால் வட தமிழகம் மீண்டும் ஒரு நல்ல மழையை பெறும் என்று கூறப்பட்டது.
மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை தனியார் வானிலை அமைப்புகளும் சென்னை உட்பட வட தமிழகம் இந்த புதிய காற்றழுத்த தாழ்வுநிலையால் நல்ல மழையை பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்தன. இந்நிலையில் வங்க கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வால் வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஆபத்து மேலும் அடுத்த 2, 3 நாட்களுக்கு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால், தாமிரபரணி, வைகை உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஆபத்து உள்ளது என்றும் மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.