திருநங்கை தாரிகாபானுவிற்கு சித்த மருத்துவக்கல்லூரியில் இடம் - நீதிபதி உத்தரவு
திருநங்கை மாணவி தாரிகா பானுவுக்கு சித்த மருத்துவக் கல்லூரியில் இடமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் உலக் குடி கிராமத்தைச் சேர்ந்தவர் தாரிகா பானு. இவர், உலக் குடி, சவலப்பேரி அரசு மேல் நிலைப் பள்ளியில் கடந்த 2015-16ம் ஆண்டில் பிளஸ் 1 படித்து, தேர்ச்சி பெற்றார்.
உடலில் ஏற்பட்ட மாற்றத்தினால் வீட்டை விட்டு வெளியேறிய தாரிகா பானு, சென்னைக்கு வந்து அறுவை சிகிச்சை செய்துகொண்டு திரு நங்கையாக மாறினார். திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் கிருஷ்ணாஜி தெருவில் குடியேறிய அவர் பிளஸ் 2 படிக்க போராட வேண்டியதாயிற்று.
தாரிகாபானு திருநங்கை என்பதால் பல பள்ளிகள் அவரை சேர்த்துக் கொள்ள மறுத்தன. இதனால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதன் விளைவாக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் அம்பத்தூர் காமராஜர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 அறிவியல் பாடப்பிரிவில் சேர்ந்தார்.
ப்ளஸ் 2வில் தேர்ச்சி
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற திருநங்கை தாரிகா பானு, தமிழில் 96, ஆங்கிலத்தில் 79, இயற்பியலில் 107, வேதியியலில் 88, தாவரவியலில் 86, விலங்கியலில் 89 என 537 மதிப் பெண்கள் பெற்றார். கடுமையான போராட்டத்திற்கு பிறகு பள்ளியில் சேர்ந்து தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், மருத்துவம் சேர்ந்து படிக்கவே தான் விரும்புவதாகவும் அவர் கூறினார்.தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி, மருத்துவம் படிக்க உதவ வேண்டும் என்று அவர் கூறினார்.
தாரிகா பானு போராட்டம்
திருநங்கை என்ற மூன்றாம் பாலினத்தவர் என்ற ஒரே காரணத்தால் 12ஆம் வகுப்பு படிக்கும்போதே பல்வேறு சிக்கல்களை சந்தித்த தாரிகாபானுவுக்கு தேவையான மதிப்பெண் இருந்தும் மெடிக்கல் சீட் தர மறுத்ததை அடுத்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
சித்த மருத்துவக்கல்லூரியில் இடம்
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நேரத்தில் தாரிகாபானுவுக்கு சீட் கொடுக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி அவர் விரும்பிய சித்த மருத்துவக்கல்லூரியில் அவருக்கு சீட் கொடுக்கப்படவுள்ளது.
முதல் திருநங்கை மாணவி
இதனையடுத்து இந்தியாவின் முதல் திருநங்கை மருத்துவக்கல்லூரி மாணவி என்ற பெருமையை தாரிகாபானு பெறுகிறார். மேலும் அனைத்து கல்வி நிறுவனங்களும் திருநங்கைகளுக்கு என ஒரு குறிப்பிட்ட இடங்களை ஒதுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அறிவுறுத்தியுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவினை அடுத்து தாரிகாபானுவிற்கு ஆதரவு அளித்து படிக்க வைத்த திருநங்கை கிரேஸ்பானு, அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார். எனது மகள் தாரிகாவிற்கு வாழ்த்துகள் ஒவ்வொரு வெற்றியிலும் உறுதுணையாக போராடிய வழக்கறிஞர் சஜீவ் குமார் அவர்களுக்கு என் நன்றி என்று கிரேஸ் பானு தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.