விருட்சம் வளர்க்க விதைப்பந்து - விரும்பி களமிறங்கிய குட்டீஸ்
இளம் வயதில் மரம் வளர்ப்பு குறித்து ஆர்வத்தினை ஏற்படுத்தினால், அவர்கள் மனதில் அது விருட்சமாய் வளரும் என்ற கருத்தினை வலியுறுத்தி,விதைப்பந்து தயாரிப்பிலும் பொள்ளாச்சி வி.எஸ்.ஆர்.ஏ., நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுடன் ஈடுபட்டுள்ளனர்.
புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மரம் வளர்ப்பு மட்டுமே தீர்வாகும் என பல வழிகளில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி,கல்லுாரி மாணவர்கள், பொதுநல அமைப்புகள், குடியிருப்போர் சங்கங்களில் மரம் வளர்க்கும்ஆ ர்வம் அதிகரித்து வருகிறது. இதேபோல், விதைப்பந்துகளை துாவி விருட்சமாய் மாற்ற பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் களமறிங்கியுள்ளனர்.
பொள்ளாச்சி வி.எஸ்.ஆர்.ஏ., நகராட்சி நடுநிலைப்பள்ளியில், 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில், சுற்றுச்சூழல் மன்றம், பசுமை இயக்கம், சமூக ஆர்வலர் சாந்தி, தலைமையாசிரியர் செல்வி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களுடன் இணைந்து விதைப்பந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் கூறுகையில், 'சிறு வயதிலே மாணவர்களிடம் மரம் வளர்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்த திட்டமிட்டோம். இதற்காக மரம் வளர்ப்பு மற்றும் அதன் பயன்கள் குறித்து விளக்கப்பட்டது.தொடர்ந்து, சாணம், இயற்கை உரம் மற்றும் மணல் பயன்படுத்தி, வேம்பு , புங்கை உள்ளிட்ட மர விதைகளை வைத்து விதைப்பந்து தயாரிக்கப்பட்டது.
மாணவர்கள் ஆர்வமுடன் இதனை தயாரித்தது மகிழ்ச்சியளித்தது. மொத்தம், 1,000 பந்துகள் தயாரிக்கப்பட்டன. இவை மாணவர்கள் மூலமாக காலியாக உள்ள இடங்களில், துாவ முடிவு செய்யப்பட்டுள்ளது. இயற்கை வளம் காக்க ஒரு சிறு முயற்சி எடுத்துள்ளோம்,' என்றனர்.