குருவின் இடத்தை, கூகுள் நிரப்பாது : பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி பேச்சு
காட்டாங்கொளத்துார்: ''மாணவர்களுக்கு வழி காட்டுவதில், ஆசிரியர்களின் இடத்தை, பிரபல தேடுபொறியான, 'கூகுள்' நிரப்ப முடியாது,'' என, காட்டாங்கொளத்துாரில் உள்ள, எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழாவில், துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு பேசினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், காட்டாங்கொளத்துாரில் உள்ள, எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர், அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர். எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக நிறுவனர் பாரிவேந்தர், வரவேற்றார்.
துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு பேசியதாவது: தொழில்நுட்ப முன்னேற்றம் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால், எவ்வளவு வளர்ந்தாலும், தேடுபொறியான, கூகுள், ஒரு சிறந்த ஆசிரியருக்கு சமமாக முடியாது. எல்லாருக்கும் திறமை உண்டு; அதை வளர்த்துக் கொள்பவரே, வெற்றியடைகிறார். நாட்டின், 65 சதவீதம் மக்கள், 35 வயதுக்கும் குறைவானவர்கள்.
இது, நம் நாட்டின் பெரும்பலம். நம் நாட்டில் எந்த பாகுபாடும் இல்லை என்பதால் தான், சாதாரண விவசாயியின் மகனான நான், துணை ஜனாதிபதியாக உள்ளேன். முயன்றால் இங்கு எல்லாருக்கும் வாய்ப்பு உண்டு. மாணவர்கள், தமிழ் மொழியை கற்க வேண்டும். தாய், தாய் மொழி, தாய் நாடு, தாய் மண் ஆகியவற்றை எந்நாளும் மறக்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், பொறியியல் மற்றும் தகவல்தொழில் நுட்பம், மருத்துவம் மற்றும் உடல்நல அறிவியல், அறிவியல் மற்றும் கலையியல் மற்றும் மேலாண்மையியல் முதலிய பாடங்களில், பட்ட வகுப்பு, முதுநிலை பட்டவகுப்பு, முனைவர் பட்ட ஆய்வு, சான்றிதழ்ப் படிப்பு பயின்ற, 6,000 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.பல்கலைக்கழகத்தின் தலைவர் சத்தியநாராயணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.