ஆதார் தகவல்கள் பாதுகாப்பானவை
ஆதார் தகவல்கள் முழுமையான பாதுகாப்பு உள்ளவை' என, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் அடையாள அட்டை ஆணையம் கூறியுள்ளது.
நாடு முழுவதும், மத்திய, மாநில அரசுகளை சேர்ந்த, 210 இணையதளங்களில், தனி நபர்களின் ஆதார் தகவல்கள், தவறுதலாக இடம் பெற்றதாக, சமீபத்தில் தகவல் வெளியானது. இதையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, ஆதார் அடையாள அட்டை ஆணையம் அளித்த பதில்: ஆதார் அட்டை தகவல்கள் முழுமையான பாதுகாப்புடன் உள்ளன; அவை, யு.ஐ.டி.ஏ.ஐ., தகவல் காப்பகம் அல்லது கம்ப்யூட்டர் சர்வரில் இருந்து, எந்த வகையிலும் கசியவில்லை.
அரசின் பல்வேறு நலத்திட்டங்களில் பயன்பெற்றோர் குறித்த ஆதார் தகவல்கள், அரசு இணையதளங்களில் இடம்பெற்றன.அவை, ஆதார் அடையாள அட்டை ஆணைய சர்வரில் இருந்து பெறப்பட்டவை அல்ல. அத்தகவல்கள் வேறு வழிகளில் பெறப்பட்டு, இணையதளங்களில் இடம்பெறச் செய்யப்பட்டவை.
அரசு இணையதளங்களில், ஆதார் தகவல்கள், தவறுதலாக இடம்பெறுவதை தடுக்க, தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்கனவே இடம்பெற்ற தகவல்கள், யு.ஐ.டி.ஏ.ஐ., நடவடிக்கையால், உடனடியாக நீக்கப்பட்டன. இவ்வாறு ஆணையம் கூறியுள்ளது.