தென் ஆப்ரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படும் இந்திய ரூபாய் நோட்டுகள்
இந்தியாவில் மதிப்பிழப்பு செய்யப்பட்ட ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மறுசுழற்சிக்கு உட்படுத்தி அட்டைகளாக மாற்றப்பட்டு தென் ஆப்ரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தப்பட உள்ளன.
கடந்தாண்டு நவம்பர் 8-ம் தேதி உயர்மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து, பழைய நோட்டுகளை வங்கியில் மாற்றி புதிய ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் பெற்றுக்கொண்டனர். பழைய ரூபாய் நோட்டுகள் எண்ணப்பட்டு பிராந்திய ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டது.
கண்டெய்னர், கண்டெய்னராக குவிந்துள்ள பழைய ரூபாய் நோட்டுகளை எரித்தால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் என்பதால், அவற்றை மறுசுழற்சிக்கு உட்படுத்த அதிகாரிகள் முடிவுசெய்தனர். இதனையடுத்து, கேரள மாநிலம் கன்னூரை சேர்ந்த கார்ட்போர்டு அட்டை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று இதற்கான டெண்டரில் தேர்வானது.
அதன்படி, திருவனந்தபுரத்தில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் இயந்திரங்கள் மூலம் அனைத்து ரூபாய் நோட்டுகளும் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்டது. துண்டு துண்டாக வெட்டப்பட்ட ரூபாய் நோட்டுகள் அந்நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த நிறுவனம், மரக்கூழுடன், ரூபாய் நோட்டு கழிவைச் சேர்த்து கார்ட்போர்டு அட்டை தயாரிக்க உள்ளது. பின்னர் இந்த கார்ட்போர்டு பிளைவுட் அட்டைகள், தென் ஆப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.
தென் ஆப்ரிக்காவில் 2019-ம் ஆண்டு தேர்தல் நடக்க உள்ள நிலையில், பிரச்சாரத்தின் போது தேர்தல் வாசகங்களை எழுதவும், பதாகைகள் தயாரிக்கவும் இவை பயன்படுத்தப்பட உள்ளன. இதேபோல, சவுதி அரேபியாவுக்கும் இவ்வகை அட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
ஒரு கண்டெய்னரில் 18 ஆயிரம் அட்டைகள் வைக்கலாம் என்று கூறியுள்ள அந்த நிறுவனத்தின் இயக்குநர், மொத்தம் 42 கண்டெய்னர் ஏற்றுமதி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். ஒரு டன் 260 ரூபாய் வீதம் 800 டன் பழைய ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.