ஒற்றை வரி பதிலால் கணினி ஆசிரியர்கள் கண்ணீர்....!
தயக்கம் காட்டுகிறதா தமிழக அரசு! அரசுத் துறை அனைத்தும் கணினி மையம்.. அரசுப்பள்ளிகளில் மட்டும் கணினி பாடத்திற்க்கு ஆசிரியர்கள் இல்லை வரமா சாபமா...?
"40 ஆயிரத்துக்கும் அதிகமான கணினி அறிவியல் பட்டதாரிகளை இந்த முடிவு வாழ்வை கேள்விக்குறியாக மாற்றியுள்ளது..?"
“ என்னங்க சார் உங்க சட்டம்… என்னங்க சார் உங்க நியாயம்..” என்று அரசை நோக்கி தொடர்ந்து நாங்கள் கேட்டுக் கொண்டிருக்க, அவர்களோ அதெல்லாம் *“அரசின் கொள்கை முடிவு”* என்று ஒற்றை வரியில் முடித்துக் கொள்கின்றனர் என்று பி.எட்., படித்த கணினி ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பிக்கப்படாமல் உள்ள பழைய பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பதற்கான பணியைத் தொடங்கியுள்ளது பள்ளிக் கல்வித்துறை. இதற்காக, குழு அமைக்கப்பட்டு, கருத்தறியும் கூட்டங்களை நடத்தி, மாற்றத்திற்கான பணிகள் தீவிரமாகியுள்ளது. அரசின் இந்த புதிய பாடத்திட்டத்தில் நவீன தொழில்நுட்பங்களை இளைய தலைமுறைக்கு கல்வி வழியாக அளிக்கும் வகையில், அரசு பள்ளிகளில் 3-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் கட்டாயமாக்கப்படுகிறது.
இதனால், மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆயிரக்கணக்கான கணினி ஆசிரியர் பணியிடங்கள் உருவாகும். இதன்மூலம் கணினி ஆசிரியர் படிப்பு முடித்தவர்களுக்கு அரசுப்பணி கிடைக்கும் என்று பி.எட்., படித்த கணினி ஆசிரியர்கள் மகிழ்ச்சிக்கு ஆளாகினர்.
ஆனால், அவர்களின் இந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பாடம் நடத்த, அறிவியல் ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி வழங்கப்படும் என்று *தலையில் இடி விழுந்ததைப் போல* ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு. இதனால் அதிர்ச்சிக்குள்ளான கணினி பட்டதாரிகள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கினாலும், மனுக்கள் மூலம் கோரிக்கை வைத்து மன்றாடினாலும் சாதகமான பதில் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் குமரேசன் கூறியதாவது: அரசு பள்ளிகளில் தமிழுக்கு தமிழாசிரியர், ஆங்கிலத்திற்கு ஆங்கில ஆசிரியர், கணிதத்திற்கு கணித ஆசிரியர் என்று அந்தந்த பாடங்களுக்கு அந்தந்த துறை சார்ந்த ஆசிரியர்கள் பணியில் சேர்க்கும் போது, கணினி அறிவியலுக்கு மட்டும் கணினி ஆசிரியர்களை நியமிக்காமல், அறிவியல் ஆசிரியர்களை நியமனம் செய்ய முயற்சிப்பது எந்த விதத்தில் சரியாகும்..??
“அரசு பள்ளிகளில் ஆசிரியர் ஆகிவிடலாம்” என்ற கனவுகளுடன் கஷ்டப்பட்டு, கடன்பட்டு 1992-ஆம் ஆண்டு முதல் இன்று வரை *BCA., B.Sc.,(CS) B.Sc.,(IT) ஆகிய பட்டப்படிப்புகளும், கணினி அறிவியலில் பி.எட்.,-ம் படித்து 40,000-கும் அதிகமான கணினி அறிவியல் பட்டதாரிகளை இந்த முடிவின் மூலம் வஞ்சித்துள்ளது தமிழக அரசு. இது பி.எட்., பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியாகும்.
கடந்த மூன்று சட்டசபை தேர்தல்களிலும், கணினி அறிவியல் பி.எட்., பட்டதாரிகளுக்கு தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வழங்கப்படும் என்று ஆளும் அதிமுக உட்பட முக்கிய அரசியல் கட்சிகள் வாக்குறுதிகள் அளித்துள்ளன. ஆனால், ஆட்சிக்கு வந்ததும் வழக்கம்போல எங்களை மறந்துவிட்டனர். இதன் மூலம் அரசு வேலை கிடைக்கும் என்று நம்பியிருந்த நிலையில் தமிழக அரசின் தொடர் புறக்கணிப்பு எங்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
எங்களின் இப்பிரச்சனை தொடர்பாக, தலைமை செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவில் 63 முறையும், தற்போதைய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் 37 முறையும் நேரடியாக… தொடர்ச்சியாக கோரிக்கை மனு அளித்திருக்கிறோம். ஆனால், எந்தப்பயனும் இல்லை. பள்ளிக்கல்வித் துறையிலும் பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களோ இதெல்லாம் *” அரசின் கொள்கைமுடிவு “* என்று ஒற்றை வரியை பதிலாக கூறிவிட்டு ஒதுங்கிக் கொள்கின்றனர். எங்களுக்கு வேலை வழங்கக்கூடாது என்பதுதான் அரசின் கொள்கை முடிவா என்று கேட்டால், அதற்கும் அவர்கள் பதிலளிக்க தயாராக இல்லை.
40,000 கணினி ஆசிரியர்கள் வேலையின்றி தவிக்கும் இந்த சோகத்தில் பொறியியல் (BE.,) படித்தவர்களுக்கும் பி.எட்., படிக்க அனுமதி அளித்துள்ளது வேடிக்கையாக உள்ளது. அதோடு BE.,-யில் அவர்கள் எந்த பாடப்பிரிவை படித்திருந்தாலும், அவர்கள் கணினி அறிவியல் பி.எட்., படிக்கலாம் என்பதும் கூடுதல் சலுகை வேறு.
அதோடு, மற்ற பாடங்களுக்கு உள்ளது போல கணினி அறிவியல் பாடத்திற்கும், ஆசிரியர்களுக்கும் என்று எந்தவொரு பணிவிதிமுறையோ, வரையறையோ இல்லை என்பதால், கணினி அறிவியல் பி.எட்., படித்தவர்களை தனியார் பள்ளிகளில் கூட வேலைக்கு சேர்க்க மறுக்கின்றனர். 7,000 ரூபாய் சம்பளத்துடன் கூடிய சிறப்பு / பகுதி நேர ஆசிரியர் பணி கூட மறுக்கப்படுகிறது. பி.எட்., படித்தவர்களுக்கான *AEEO, DEO* தேர்விலும் கணினி அறிவியல் பி.எட்., படித்தவர்களுக்கு வாய்ப்பில்லை என, பல்வேறு இன்னல்களையும் *” கொள்கை முடிவு “* என்ற பெயரில் தமிழக அரசு, கணினி அறிவியல் பி.எட்., பட்டதாரிகள் மீது சுமத்தியிருக்கிறது.
இதனால், ஆசிரியர் பணிக்கு படித்துவிட்டு தனியார் நிறுவனங்களில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களாகவும், தனியார் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சியாளராகவும் சொற்ப சம்பளத்திற்கு பணியாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மாண்புமிகு தமிழக அரசு 40000கணினி ஆசிரியர்கள் வாழ்வில் விரைவில் விடியல் தர வழிவகை செய்ய வேண்டும்.
வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச்செயலாளர்,
9626545446,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 655/2014