பிளஸ் 1 துவங்கும் போது, லேப்டாப் : பள்ளி கல்வித்துறை அமைச்சர் தகவல்
''பிளஸ் 1 வகுப்பு துவங்கும் போது, மாணவர்களுக்கு, 'லேப்டாப்' வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் பேசினார்.
கரூரில், மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்து, அமைச்சர், செங்கோட்டையன் பேசியதாவது: தமிழகத்தில், 412, 'நீட்' மற்றும் போட்டி தேர்வு மையங்கள், வரும் நவம்பர் மாதத்திற்குள் துவக்கப்படும். இவை மாநகராட்சி, நகராட்சி, ஒன்றியம், பேரூராட்சி அளவில் அமைக்கப்படும்.இந்த மையங்களுக்கான, 54 ஆசிரியர்கள், ஆந்திரா மாநிலத்திற்கு, பயிற்சிக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.
இவர்கள் மூலம், 3,000 ஆசிரியர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 3,000 பள்ளிகளில் தலா, இரண்டு லட்சம் ரூபாய் செலவில், 'ஸ்மார்ட் கிளாஸ்' தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த, 12 ஆண்டுகளாக பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படாமல் உள்ளது. இதையடுத்து, 2018 - 19 முதல் படிப்படியாக அனைத்து வகுப்பு பாட திட்டங்களும் மாற்றப்படும்.
கடந்த ஆண்டு, 'டெண்டர்' மற்றும் நீதிமன்ற வழக்கு காரணமாக, பிளஸ் 2 மாணவர்களுக்கு, லேப்டாப் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்பு துவங்கும்போது, லேப்டாப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசு பள்ளியில், தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு, 10ம் வகுப்பில், 10 ஆயிரம் ரூபாய், பிளஸ் 2 வகுப்பில், 20 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
சிறந்த மாணவர்களை தேர்வு செய்து, அறிவியல் ஆராய்ச்சி பற்றி தெரிந்து கொள்ள, மேலை நாடுகளுக்கு அனுப்ப இருக்கிறோம். என்றார்