பள்ளியில் காய்கறித் தோட்டம்... அசத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள்!
விவசாயத்தின் முக்கியத்துவம் மற்றும் விவசாயிகளின் நிலை குறித்துத் தற்போது அனைவரும் அதிகமாகப் பேசிவரும் நிலையில், மாணவர்கள் மனதில் இயற்கை விவசாயத்தை விதைத்துவருகிறது ஓர் அரசுப் பள்ளி.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்திலுள்ள கொத்தவாசல் கிராமத்தில் இருக்கிறது அரசு நடுநிலைப் பள்ளி. இந்தப் பள்ளியில் மாணவர்களை வைத்தே காய்கறித்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு காலைவேளையில் அந்தப் பள்ளிக்குச் சென்றோம். பள்ளியின்முன்பு விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களிடம் தோட்டம் பற்றிக் கேட்டபோது, அப்பள்ளியின் ஆசிரியர் இளவழகன் என்பவரை நோக்கி விரல் நீட்டினார்கள். மாணவர்களோடு விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் இளவழகனிடம் பேசினோம். “நான், திருமானூரில் உள்ள குருவாடி அரசுப் பள்ளியில்தான் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது அங்கே தலைமை ஆசிரியராக இருந்தவர் விஸ்வநாதன். அவர் 55-ம் ஆண்டுச் சுதந்திரத் தினவிழாவை முன்னிட்டுப் பள்ளி வளாகத்தில் 55 தென்னை மரக்கன்றுகளை அப்போது நட்டுவைத்தார்.
அந்த 55 கன்றுகளுமே மரமாக வளர்ந்து பயன்கொடுக்க ஆரம்பித்தபிறகு... பள்ளிக்குத் தேவையான செலவுகளைத் தேங்காய் விற்பனைமூலம் வந்த வருமானத்தில் ஈடுகட்டினோம். அந்த விஷயம் என் மனதில் மிக ஆழமாகப் பதிந்திருந்தது. அதைத்தொடர்ந்து மரக்கன்றுகள் நடுவது, பராமரிப்பது போன்ற சூழல் சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டு வந்தேன். போன வருஷம் இந்தப்பள்ளிக்கு மாற்றலாகி வந்தேன். இது மிகவும் பின்தங்கிய பகுதி. பள்ளியைச் சுற்றிலும் ஆடுகளும் பன்றிகளும் மேய்ந்துகொண்டிருந்தன. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று களத்தில் இறங்கினேன்.
அந்தச் சமயத்தில் கலெக்டராக இருந்த நந்தகுமார், விவசாயத்தின் அருமையைப் பள்ளி மாணவர்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில், வாரம் ஒருநாள் தோட்டக்கலைத்துறை வகுப்பு எடுக்கும்படி வலியுறுத்தினார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி... சுற்றுச்சூழல் மன்றம், பசுமைப்படை மன்றம் ஆகியவை மூலமாக மாணவர்களை இணைத்துப் பள்ளிக்கு அருகிலுள்ள கரடுமுரடான இடத்தைச் சீர் செய்தோம். ஏரி மண், ஆட்டு எரு, மாட்டுச் சாணம் ஆகியவற்றை இட்டு நிலத்தை வளப்படுத்தினோம்.
தோட்டக்கலைத்துறை மூலமாக வழங்கப்பட்ட காய்கறி, கீரை விதைகளை விதைத்தோம். இப்போதும் மாணவர்களே பயிர்களைப் பராமரித்து வருகிறார்கள். தாங்கள் விதைத்த விதைகள் கண்ணெதிரே செழித்து வளர்வதைக் கண்டு மிகவும் உற்சாகத்தோடு வேலை செய்கிறார்கள் மாணவர்கள். பள்ளி நாள்களில் மட்டுமில்லாமல் விடுமுறை நாள்களிலும்கூட வந்து தண்ணீர்விட்டுப் பராமரிக்கிறார்கள்” என்றார்.
மாணவர்கள் அமைத்திருக்கும் தோட்டம் பற்றிப் பேசிய பள்ளியின் தலைமையாசிரியர் இளங்கோவன், “இங்கே அறுவடை செய்யப்படும் காய்கறிகளைப் பள்ளியில் வழங்கும் மதிய உணவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறோம். எங்கள் மாணவர்கள் இயற்கை முறையில் பயிரிடும் காய்கறிகளைச் சாப்பிடுவதால் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். இந்தப் பள்ளித் தோட்டத்திலிருந்து வாரத்துக்கு 10 கிலோ காய்கறிகளை அறுவடை செய்கிறோம். முழுவதையும் மாணவர்களுக்காகவே பயன்படுத்தி வருகிறோம். அதிகமாக மகசூலாகும் சூழ்நிலையில் அவற்றைச் சுழற்சி முறையில் மாணவர்களுக்கே கொடுத்து விடுகிறோம்.
சமீபகாலமாக விவசாயிகள், இயற்கை விவசாயத்தை நோக்கித் திரும்பி வருகிறார்கள். சிறு வயதிலேயே மாணவர்கள் மனதில் இயற்கை விவசாயம் என்கிற நல்விதையை அவர்களின் மனதில் விதைப்பதால் நாளைய தலைமுறையினர் ஆரோக்கியமாக இருப்பார்கள். இதுபோன்ற முயற்சியை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முன்னெடுக்க வேண்டும். எங்களின் அடுத்த திட்டமாகப் பள்ளியைச் சுற்றிலும் மூலிகைத் தோட்டம் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
பள்ளியில் தோட்டம் அமைத்ததையடுத்துக் கிராமத்திலுள்ள அனைத்து வீடுகளிலும் ‘வீட்டுக்கு ஒரு மரம்’ என்கிற திட்டத்துடன் மாணவர்களோடு களத்தில் இறங்கி இருக்கிறார் இளவழகன்.
இதுகுறித்த புள்ளிவிவரங்களைச் சேகரித்துவரும் மாணவன் நவீன், “எங்க ஊர்ல ஒவ்வொரு வீடாகப் போய் அந்த வீட்டுல என்ன மரம் இருக்குனு தகவல் சேகரிச்சுட்டு இருக்கேன். அதோட என்ன வகையான மரக்கன்று கொடுத்தா வளப்பீங்கனும் கேட்டுக் குறிச்சுட்டிருக்கேன். எங்க ஊர்ல பூவரசு, தேக்கு, வேப்பமரங்களைத்தான் அதிகமாகக் கேக்குறாங்க. அதுக்கு ஏற்பாடு பண்ணிட்டு இருக்கார் எங்க ஆசிரியர். நாங்கள்லாம் வளந்து வர்றப்போ எங்க ஊர் முழுக்க மரங்களாத்தான் இருக்கும். அதுதான் எங்களோட ஆசையும்” என்றார்.
தோட்டத்தைப் பராமரிக்கும் மாணவ மாணவிகளில் ஒருவரான மகேஸ்வரி, “ரசாயன உரங்களைப் போட்டா மண்ணுல இருக்குற நுண்ணுயிர்கள்லாம் செத்துப் போயிடும்னு சொல்லிக் கொடுத்தாங்க. ரசாயன உரம் போட்டு விளைஞ்ச காய்கறிகள், கீரைகளைச் சாப்பிட்டா உடம்பும் கெட்டுப் போய், நோய்களும் வரும்னு சொல்லிக் கொடுத்திருக்காங்க.
தினமும் காலையில் ஸ்கூலுக்கு வந்ததும் முதல் வேலை செடிகளுக்குத் தண்ணி ஊத்துறதுதான். அதேமாதிரி சாய்ங்காலம் ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடி தண்ணி ஊத்திட்டுத்தான் போவோம். பராமரிக்கிறது, களை எடுக்குறது, எரு போடுறது பத்தியெல்லாம் விவசாய அதிகாரிகள் வந்து சொல்லிக் கொடுக்கிறாங்க. அதை வைத்துத் தோட்டத்தைப் பராமரிக்கிறோம்” என்றார். பள்ளித்தோட்டத்துக்கு அவ்வப்போது ஆலோசனைகளைச் சொல்லிவரும் சூழலியல் செயல்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா, “மாணவர்களுக்குத் தேவையானதை அவர்களே தயார் செய்து கொள்வதால் மாணவர்களிடம் இயற்கை மீதான அக்கறையும் தன்னம்பிக்கையும் மேலோங்கி இருக்கிறது. இயற்கைமீது நெருக்கம் உண்டாகிறது. நாட்டு விதைகளைச் சேமித்து வைக்கும் பழக்கமும் மாணவர்களிடையே உருவாகியுள்ளது” என்றார்.
தொடர்புக்கு, இளவழகன், செல்போன்: 98943 00627.