அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனிப் பயிற்சி வகுப்பு (டியூஷன்) எடுக்கக் கூடாது என்ற உத்தரவு சரியா? என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
பாதிப்பு
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனிப் பயிற்சி வகுப்பு (டியூஷன்) எடுக்கக் கூடாது என்ற உத்தரவு சரியே. வகுப்பறையில் அக்கறையுடன் சொல்லிக் கொடுத்தாலே மாணவர்கட்கு டியூஷன் போக வேண்டும் என்ற எண்ணம் வராது. மேலும் டியூஷன் எடுக்கும் ஆசிரியர்கள் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு டியூஷனில்தான் நன்றாக சொல்லித்தருவார்கள். இதனால் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
செ.வ. மதிவாணன், கள்ளக்குறிச்சி.
கவனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதிக சம்பளம் பெறுகிறார்கள். தனியாக அவர்கள் மாணவர்களுக்கு டியூஷன் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. டியூஷன் எடுத்தால், டியூஷன் படிக்கும் மாணவர்களிடம் மட்டும் தனிக்கவனம் செலுத்த வாய்ப்பு ஏற்படும். எனவே அனைத்து மாணவர்களுக்கும் பள்ளியிலேயே பாடம் எடுத்து அனைவரையும் திறமைசாலிகளாக உருவாக்க வேண்டும்.
எஸ்.எஸ்.ஏ. காதர், காயல்பட்டினம்.
சுய உரிமை
இந்த உத்தரவு சரியல்ல. விருப்பமுள்ள மாணவ - மாணவியர் பெற்றோர் அனுமதியுடன்தான் தனிப்பயிற்சிக்குச் செல்கிறார்கள். ஆசிரியர்கள் தனிப்பயிற்சி வகுப்பில் சேர மாணவர்களை வற்புறுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். அப்படியில்லாதபோது அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சுயஉரிமையில் கல்வித்துறை தலையிட வேண்டியதில்லை. டியூஷன் என்பது சுமாராகப் படிக்கும் மாணவர்களுக்கு நன்மை பயக்கும்.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.
ஏற்கத்தக்கதல்ல
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்தில் அக்கறையுடன் செயலாற்றிட வேண்டும். தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் குறைந்த சம்பளத்துடன் கடினமான உழைப்பை நல்கி நல்ல தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுத் தருகிறார்கள். பொருளீட்டுவதே நோக்கமாகக் கொண்டு அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் டியூஷன் எடுப்பது ஏற்கத்தக்கதல்ல.
இராம. கோவிந்தன், தென்னிலை.
பேராசை
இது நியாயமான உத்தரவே. வேலைவாய்ப்பற்ற பட்டதாரி இளைஞர்கள் தனிப்பயிற்சி வகுப்பு நடத்துகிறார்கள் என்றால் அது வருமானம் கிடைக்கும் என்ற நோக்கத்திற்காக. ஆனால், போதிய சம்பளம் பெறும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனிப்பயிற்சி வகுப்பு நடத்துவது பேராசையின் வெளிப்பாடு. அதிக ஊதியம் பெறும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனிப்பயிற்சி வகுப்புகள் எடுப்பதைத் தடை செய்வதே சரி.
ந. ஜெயசூர்யா, கண்ணமங்கலம்.
நன்மை
அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைக்கக் கூடாது என்ற விதியை எத்தனை மருத்துவர்கள் பின்பற்றுகின்றனர்? எனவே ஆசிரியர்கள் டியூஷன் எடுக்கக் கூடாது என்றால், அது வெறும் ஏட்டளவில் மட்டுமே இருக்குமேயன்றி அதனை நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினம். தனிப் பயிற்சியால் எத்தனையோ மாணவர்களுக்கு நன்மை கிடைத்திருக்கிறது.
பூ.சி. இளங்கோவன், அண்ணாமலைநகர்.
எதற்காக?
மாணவர்களுக்குப் பாட சம்பந்தமாகத் தேவையான எல்லாச் செய்திகளும் வகுப்பில் கிடைத்துவிட்டால் பின்னர் எதற்காகத் தனிப் பயிற்சி வகுப்பு? வீட்டுப் பாடங்களைச் செய்து முடிக்க தனிப் பயிற்சி வகுப்புகளுக்கு பிள்ளைகளை அனுப்புவதாகப் பெற்றோர் கூறினாலும் அது முற்றிலும் உண்மையில்லை. பள்ளியில் ஒழுங்காக பாடம் நடத்தாமல் மாணவர்களுக்கு தனிப்பயிற்சி எடுப்பது கொடுமையிலும் கொடுமை.
அ. கருப்பையா, பொன்னமராவதி.
கண்கூடு
இந்த உத்தரவு சரியல்ல. சில மாணவர்கள் படிப்பில் பின்தங்கியிருப்பது கண்கூடு. அவர்களுக்கு தனிப் பயிற்சி கட்டாயம் தேவை. சில மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பது அம்மாணவர்களின் முன்னேற்றம் கருதியே. பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு இதனால் சிறு ஊதியம் வரலாம். அவர் தனது உழைப்புக்குத்தான் ஊதியம் பெறுகிறார். இதில் வேறு நோக்கம் ஏதுமில்லை.
வி.எஸ். கணேசன், சென்னை.
கடமை
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்போர் முழுநேர அலுவலர்கள் ஆவர். அவர்கள் தனிப் பயிற்சி வகுப்பு எடுப்பதன் காரணம் வருமான நோக்கமே. முழுநேர ஊதியம் பெற்று பணிபுரிந்து வரும் அவர்கள் தங்களிடம் பயிலும் மாணவர்கள் மேம்பாடு அடையும் வகையில் பள்ளி வகுப்பிலேயே பயிற்சி அளித்தல் வேண்டும். அதை அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடுதல் நேரத்தில் பணிபுரிந்து செய்ய வேண்டியது அவர்களின் கடமை.
ராஜசிம்மன், கிருஷ்ணகிரி.
கட்டணம்
எல்லா மாணவர்களின் கற்கும் திறனும் ஒரே மாதிரி இருப்பதில்லை. கிராமப்புற மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் பெற டியூஷன் உதவும். தனியார் டியூஷன் நிறுவனங்கள் அதிக பணம் பறிப்பது நாம் அறிந்ததே. அரசு ஆசிரியர்கள் ஓரளவு நியாயமான கட்டணம் வசூலிப்பார்கள். தன்னிடம் பயிலும் ஒவ்வொரு மாணவனின் திறமைக்கு ஏற்றாற்போல பாடம் நடத்துவார்கள்.
பைரவி, புதுச்சேரி.
களங்கம்
படிப்பில் பின்தங்கியிருக்கும் மாணவர்களுக்குப் பள்ளி நேரம் முடிந்த பின் பள்ளியிலேயே ஆசிரியர்கள்பயிற்சி அளிப்பதில் தவறில்லை. ஆனால், வீட்டிலோ, வாடகை அறையிலோ கட்டணம் பெற்றுக் கொண்டு தனிப் பயிற்சி வகுப்புகள் எடுப்பது ஆசிரியர் பணிக்கே களங்கம் கற்பிப்பதாகும். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமல்ல, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் இது பொருந்தும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.
பாரபட்சம்
இந்த உத்தரவு சரியல்ல. அப்படியெனில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் தனிப் பயிற்சி வகுப்பு எடுக்கலாம் என்று ஆகிறது. அரசுப் பள்ளி ஆசிரியராவது, வகுப்பறைக்குப் பின்னும், பாடங்களை சொல்லித் தர முயல்வதுண்டு. ஆனால் தனியார் பள்ளிகளில் வகுப்பில் சொல்லிக் கொடுப்பதோடு சரி. எனவே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூஷன் எடுக்கக் கூடாது என்ற உத்தரவு பாரபட்சமானது.
பி.கே. ஜீவன், கும்பகோணம்.
நன்றி தினமணி