பொதுத்தேர்வுக்கு கூடுதலாக ஆயிரம் மையங்கள்
பொதுத்தேர்வுக்கு கூடுதலாக, 1,000 தேர்வு மையங்கள் அமைக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், கோபியில், அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, கூடுதல் மையங்கள் அமைக்கப்படும்; ௧௦ கி.மீ.,க்குள் மையங்கள் இருக்கும். அதன்படி, நடப்பாண்டில், 1,000 தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்படும். இதனால், தேர்வு சமயத்தில், மன உளைச்சல் இருக்காது. 'நீட்' தேர்வை பொருத்தவரை, தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்பது தான், மாநில அரசின் கொள்கையாக உள்ளது. மத்திய அரசின், எந்த பொதுத்தேர்வையும் சந்திக்கும் அளவுக்கு, மாணாக்கர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அடுத்த மாதம் முதல் வாரத்தில், இதற்கான பணி துவங்கும். தமிழகத்தில் கற்றல் குறைபாடு, மாணவர்களின் அச்சத்தை போக்கும் வகையில், அக்.,௧௫ முதல் வகுப்பறைகளில், பயிற்சி அளிக்கப்படும். ஐ.ஏ.எஸ்., பயிலும் மாணாக்கர்களுக்கு, தமிழகத்தில் உள்ள, 32 நுாலகங்களில், பயிற்சி அளிக்கப்படும். தற்போது, இதற்காக பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதற்காக, 2.17 கோடி ரூபாய் நிதி, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.