புதுச்சேரி மருத்துவ மாணவர்கள் நீக்கத்துக்கு இடைக்காலத் தடை
புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்து வந்த 778 மருத்துவ மாணவர்களை நீக்கி புதுச்சேரி அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளுக்குப் புறம்பாக கடந்த 2016 - 17 -ஆம் கல்வியாண்டில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டதாக 778 மாணவர்களை நீக்கி புதுச்சேரி அரசு கடந்த 14 -ஆம் தேதி உத்தரவிட்டது. அரசின் இந்த உத்தரவை எதிர்த்து மருத்துவ மாணவர்கள் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், ' இந்திய மருத்துவக் கவுன்சில் பரிந்துரையை ஏற்று புதுச்சேரி அரசு தங்களை நீக்கி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து மருத்துவ படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும்' என அந்த மனுவில் கோரியிருந்தனர்.
இந்த மனு செவ்வாய்க்கிழமை, நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், 'மாணவர்கள் நீட் தேர்வின்அடிப்படையிலேயே சேர்க்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி அரசு இவர்களை நீக்குவதற்கு முன்பாக எந்த அறிவிப்பும் தரவில்லை.மேலும் ஓராண்டுக்குப்பின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் படிப்பைத் தொடர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்' என வாதிடப்பட்டனர். அதற்கு மருத்துவக் கவுன்சில் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி , புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்து வந்த 778 மருத்துவ மாணவர்களையும் நீக்கி புதுச்சேரி அரசு பிறப்பித்த உத்தரவுக்கு வரும் அக்டோபர் 23 -ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இதுதொடர்பாக மத்திய அரசு, புதுச்சேரி அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு , இந்த வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர் 23 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.