நீதிமன்ற அவமதிப்பு: ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் செப்.15- இல் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்திய ஜாக்டோ-ஜியோ அமைப்பு நிர்வாகிகள் செப்.15 இல் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் (ஜாக்டோ ஜியோ) செப்.7 -ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு தடை கோரி மதுரையைச் சேர்ந்த டி.சேகரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி தமிழகம் முழுவதும் 70 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.சேகரன் மற்றொரு மனு செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்குரைஞர் வாதிடுகையில், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களுக்கு நீதிமன்றத்தின் தடை உத்தரவு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். அரசு ஊழியர்களின் நடத்தை விதிகளை மீறும் வகையில் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவர் எம்.சுப்பிரமணியம், தமிழ்நாடு முதுநிலை ஆசிரியர் சங்கத் தலைவர் தாஸ், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் மோசஸ் உள்ளிட்டோர் செப்டம்பர் 15 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.