அரசு ஊழியர் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்
அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்' என, முதல்வர் பழனிசாமியை, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை: 'பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்; மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை ஏற்க வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை, மாநில அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.
அவர்களின் உரிமை போராட்டத்திற்கு, உயர் நீதி மன்றம் தடை விதித்துள்ளது. இருப்பினும், 'நியாயமான கோரிக்கைகளை முன் வைத்து, இன்று முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவோம்' என, அறிவித்துள்ளனர். அரசு இயந்திரம் சுழல, அரசு ஊழியர்கள் அச்சாணியாக உள்ளனர்; ஆசிரியர்கள், கல்விக்கண்களாக விளங்குகின்றனர்.
இவர்களின் கோரிக்கைகளை செயல்படுத்துவதில், தமிழக அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டக்கூடாது. அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, நிர்வாகம் முடங்காமலும், பொதுமக்கள் மேலும் அவதிப்படாமலும், அரசு விரைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.