நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும் - டாக்டர் க.கிருஷ்ணசாமி
'நீட் தேர்வு அடிப்படையில், மருத்துவ மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும். தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இத்தீர்ப்பு, வரவேற்கத்தக்கது. ஓராண்டாக, தமிழகத்தில் இத்தேர்வு குறித்து விவாதம் எழுந்த போதெல்லாம், மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு, இத்தேர்வு அவசியம் என, வலியுறுத்தி உள்ளேன்.
மருத்துவ மாணவர் சேர்க்கையில், குறைந்தபட்ச தகுதியை, அகில இந்திய அளவில் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், இத்தேர்வு கொண்டு வரப்பட்டது.
இந்திய மருத்துவக் கழகத்தால் பரிந்துரை செய்யப்பட்டு, மத்திய சுகாதார அமைச்சகத்தின் வாயிலாக, லோக்சபாவில் சட்டம் இயற்றப்பட்டது. அதை எதிர்த்த வழக்குகளும், உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன.
அகில இந்திய அளவில், அரசு மற்றும் தனியார் மருத்துவ பல்கலைகள், மருத்துவ கல்லுாரிகளுக்கும் இத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டது.
புதிதல்ல இது
இத்தேர்வு, புதிதாக முளைத்தது அல்ல. 30 ஆண்டுகளாக, அகில இந்திய அளவில் நடந்த, ஏ.ஐ.பி.எம்.இ.டி., தேர்வின் விரிவாக்கம், 'நீட்' தேர்வு.
அரசு மருத்துவக் கல்லுாரிகளிலுள்ள, 15 சதவீத இடங்களை, மத்திய தொகுப்பிற்கு கொண்டு சென்று, அகில இந்திய அளவில், மாணவர்களுக்கு, ஏ.ஐ.பி.எம்.இ.டி., மூலம் சேர்க்கை நடந்தது.
அது நீட்டிக்கப்பட்டு, 100 சதவீதம் அரசு மருத்துவக் கல்லுாரி இடங்களுக்கும், தனியார் நிகர்நிலை மருத்துவ பல்கலைகளுக்கும், தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கும் சேர்த்து, 'நீட்' தேர்வு நடத்தப்படுகிறது.
எவ்வளவோ இழந்தோம்
தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு, பல வழிகளிலும் மாநில அரசுகளுக்கு பலனளிக்க கூடியது. ஏ.ஐ.பி.எம்.இ.டி., தேர்வுக்கு, தமிழக மாணவர்கள், டில்லி, பெங்களூரு சென்று படித்தனர்.
மாநில அரசு முயற்சி செய்திருந்தால், அகில இந்திய ஒதுக்கீட்டில், அதிக இடங்களை பிடித்திருப்பர். 30 ஆண்டுகளில், 15 ஆயிரம் இடங்களை, இதனால் இழந்துள்ளோம்.
இப்போது, எம்.டி., - எம்.எஸ்., பட்ட மேற்படிப்புகளுக்கு, 50 சதவீதம் இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிலும், 50 சதவீத இடங்கள், மாநில ஒதுக்கீட்டிலும் நிரப்பப்படுகின்றன. எனவே, 'நீட்' தேர்வு, எந்த விதித்திலும் புதிதல்ல.
மாணவர்களும், இத்தேர்விற்கு தங்களை தயார்படுத்தி வந்துள்ளனர். இல்லையெனில், இந்தாண்டு நடந்த, 'நீட்' தேர்வில், 88 ஆயிரம் மாணவர்கள், எப்படி தேர்வு எழுத வந்திருப்பர்... அதில் எப்படி, 33 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்திருப்பர்... வெற்றி பெற்ற, 33 ஆயிரம் பேரில், 3,000 பேரை தேர்வு செய்ய, அரசு திணற வேண்டி இருக்கிறது.
எதிரானதல்ல
தமிழகத்தில், மாநில பாடத்திட்டத்தின்படி, பிளஸ் 2 தேர்வு எழுதிய, ஒன்பது லட்சம் மாணவர்களில், 15 ஆயிரம் பேர் மட்டுமே, சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.சி., போன்ற படிப்புகள் மூலம் தேர்வு எழுதியவர்கள். 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற, 33 ஆயிரம் பேரில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்தவர்கள், 7,000 பேர் மட்டுமே.
மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள், 26 ஆயிரம் மாணவர்கள். இது தான், உண்மை நிலவரம். எனவே, 'நீட்' தேர்வு மாநில திட்ட மாணவர்களுக்கு எதிரானது என்ற வாதம், அடிப்படை இல்லாதது.
'நீட்' தேர்வில், 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற, 750 பேரில், 88 பேர் மட்டுமே, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் பயின்றவர்கள். இது போன்ற புள்ளி விபரங்கள் அனைத்தும், மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு சாதகமாகவே உள்ளன.
கட்சிகளின் கூப்பாடு
எனினும், அரசியல்வாதிகள், இந்த பிரச்னையை பூதாகரமாக்கி விட்டனர். அவர்கள், கிராமப்புற மாணவர்கள் என்ற வாதத்தையும் சேர்த்துள்ளனர். 10 ஆண்டுகளில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்கப்பட்ட, ௩௦ ஆயிரம் பேரில், 350 பேர் மட்டுமே, அரசு பள்ளிகளிலிருந்து வந்தவர்கள். பிளஸ் 2 மதிப்பெண்படி, மாணவர் சேர்க்கையை நடத்தி இருந்தால், ஒரு சதவீதம் மட்டுமே, அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். இதற்காகவா இத்தனை கூப்பாடு?
தமிழகத்தில், சமீபகாலமாக, ஒரு மோசமான அரசியல் நடத்தப்படுகிறது. எல்லா போராட்டங்களுக்கும், தமிழ்மொழியை ஒட்டி, போராட்டத்தை துவக்கி விடுகின்றனர்.
'நீட்' தேர்வின் மீது ஏற்பட்ட பற்றின் காரணமாகவோ, மோகத்தின் காரணமாகவோ, நான், 'நீட்' தேர்வை ஆதரிக்கவில்லை. 'நீட்' தேர்வு என்பது, அளவு கோல்; இந்த அளவுகோலை தாண்ட வேண்டும் என்பதே, என் நோக்கம்.
சரிந்து வரும் கல்வித்தரம்
பல ஆண்டுகளாக, தமிழத்தில் கல்வித் தரம் சரிந்து விட்டது. தமிழகத்தை தாண்டி, நம் மாணவர்கள், எந்த தேர்விற்கும் செல்ல தயங்குகின்றனர். எனவே, பள்ளிகளில், கல்வியின் ஒட்டுமொத்த தரம் உயர்த்தப்பட வேண்டும்.
'நீட்' தேர்வோ, வேறு எந்த தேர்வோ, நம் பள்ளிகள், அதை சந்திக்கும் திறனை வளர்ப்பதாக இருக்க வேண்டும். 'நீட்' தேர்வை முன்மாதிரியாக கொண்டாவது, நம் கல்வித்தரம் உயர்த்தப்படாதா என்ற ஆதங்கம், அத்தேர்விற்கு ஆதரவு தர செய்துள்ளது.
'நீட்' தேர்வு எதிர்ப்பாளர்கள், தமிழக மாணவர்கள், வருங்கால இளைஞர் சமூகம் திறன் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை காட்டிலும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கோஷமாக மட்டுமே, 'நீட்' தேர்வு எதிர்ப்பை உயர்த்தி பிடித்தனர்.
தமிழகம் மட்டுமின்றி, நாடு அளவில், சர்வதேச அளவில், தமிழக மாணவர்களை, அனைத்து வித போட்டிகளுக்கும் தயார்படுத்துவோம்; நம் கல்வித் தரத்தை உயர்த்துவோம்.
துரதிர்ஷ்டவசமானது
அரியலுார் மாணவி அனிதாவின் மரணம் திட்டமிட்டு அரசியலாக்கப்படுகிறது. திறமைவாய்ந்த மாணவியின் மரணம் அனைவரின் மனதையும் பாதித்துள்ளது. அவரது மரணம் வருத்தம் தருகிறது.
பிளஸ் 2 தேர்வில், 1,176 மதிப்பெண் பெற்றும், 'நீட்' தேர்வில் போதிய மதிப்பெண் பெற முடியவில்லை. எனவே, பிளஸ் 2 தேர்வின் அடிப்படையில் மட்டும் தான் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் மனுதாரராக சேர்க்கப்பட்டவர்.
அந்தளவுக்கு மனோதிடம் மிக்க மாணவி. 15 நாட்களுக்கு பின், அவர் அந்த முடிவிற்கு தன்னிச்சையாக வந்தாரா அல்லது எத்தகைய அழுத்தத்தால் இந்த முடிவுக்கு வந்தார் என்ற சந்தேகம் எழுப்பப்படுகிறது.
உயர்கல்வி மாற்றம் புதிதல்ல
தமிழகத்தின் வரலாற்றில் மட்டுமல்ல. இந்தியா முழுமைக்கும் மாணவர்கள் உயர் படிப்புகளுக்கான தேர்வுகளை சந்திக்கின்றனர்.
அதில் மருத்துவம் முதல் வாய்ப்பாகவும் பிற தொழிற்கல்விகளை அடுத்தடுத்த வாய்ப்புகளாக வைத்து கொள்கின்றனர். மருத்துவ மாணவர் சேர்க்கை தாமதமானதால், மாணவர்கள் பொறியியல் கல்வியில் சேர்ந்துள்ளனர். மருத்துவ சேர்க்கை துவங்கியதும் அதில் வந்து சேர்ந்து கொள்கின்றனர்.
ஒரு உயர்கல்வியிலிருந்து மற்றொரு உயர் கல்விக்கு மாறுவது புதிதல்ல. அனிதாவும் ஓராண்டு காத்திருந்தால் தன்னை, 'நீட்' தேர்வுக்கு தயார் படுத்தியிருந்தால், அடுத்தாண்டு நிச்சயம் வாய்ப்பு கிடைத்திருக்கும். இது போல நல்ல முடிவு எடுக்க ஆக்கமும், ஊக்கமும் அனிதாவிற்கு அளிக்கப்படவில்லை எனத் தோன்றுகிறது.
நீலத் திமிங்கலம்
பொறியியல் அல்லது வேளாண் கல்லுாரிகளில் சேர எடுத்த முயற்சியையும் யாரோ சீர்குலைத்துள்ளதாக தோன்றுகிறது. 'நீட்' தேர்வு இல்லாமலிருந்தால் மட்டுமே மருத்துவம் படிக்க வாய்ப்புண்டு என, அவர் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார்.
இதுவும், ஒரு நீலத் திமிங்கலம் விளையாட்டிற்கு ஒப்பானதே. அவரது மரணம் பல சந்தேகங்களை எழுப்புகிறது. அவரது இழப்பு அவர் குடும்பத்திற்கு மட்டுமில்ல நாட்டிற்கும் தான்.
'நீட்' தேர்வுக்கு எதிரான அழுத்தங்கள் அனிதாவை இப்படியொரு சூழலுக்கு தள்ளியிருக்க கூடும். அரசியல் இயக்கங்கள் அனிதாவை, 'நீட்' தேர்வுக்கு எதிரான 'பிராண்ட்' ஆக பயன்படுத்துவது வரலாற்று பிழை.
வெற்றி பெற வாய்ப்பு
கல்வியாளர்களும், மக்களும் உலகளவில் எழும் சவால்களை சந்திக்க, 'நீட்' தேர்வு மட்டுமின்றி எந்த தேர்வையும் சந்திக்குமளவு மாணவர்களின் திறமையை வளர்க்க உதவிட வேண்டும்.
பின்தங்கிய வடமாநிலங்களே, 'நீட்' தேர்வை ஏற்று கொள்ளும் போது, முன்னேறிய மாநிலமான தமிழகம் விலக்கு கேட்பது எந்த விதத்தில் நியாயம்... அரசு முழு முயற்சி செய்து பயிற்சி கொடுத்தால், தமிழக மாணவர்கள் பெரிய வெற்றிகளை குவிப்பர். தடைகல்லாக இருப்பது, அரசியலே தவிர தகுதி அல்ல.
டாக்டர் க.கிருஷ்ணசாமி,
நிறுவனர், புதிய தமிழகம்.