தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்
தமிழகம் முழுவதும் ‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேற்று வேலைநிறுத்தம் செய்தனர். சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 7-வது ஊதியக் குழுவின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிக்க வேண்டும், புதிய ஊதியம் நிர்ணயிப்பதில் காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்பு சார்பில் 7-ந்தேதி (அதாவது நேற்று) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் முதல்- அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை ஓரளவு திருப்தி அளித்ததாகவும், எனவே தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைக்கலாம் என்று ‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் இளங்கோ மற்றும் கணேசன் ஆகியோர் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொள்ளாத ‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்பினர் இளங்கோ மற்றும் கணேசனை நீக்கி, புதிய ஒருங்கிணைப்பாளர்களாக சுப்பிரமணியன் மற்றும் மாயவனை தேர்வு செய்தனர்.
புதிய ஒருங்கிணைப்பாளர்கள் போராட்டத்தை முன்னெடுக்க தீவிரமானார்கள். ‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்பில் இருவேறு நிலைப்பாடுகள் நிலவியதால், காலவரையற்ற வேலை நிறுத்தம் நடக்குமா? நடக்காதா? என்று குழப்பம் நிலவியது.
இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய அரசு அலுவலகங்கள் முன்பு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். தலைநகர் சென்னையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு இருந்தன.
இந்தநிலையில் திட்டமிட்டபடி ‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேற்று காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் பணிக்கு வந்தவர்கள் கூடுதலாக வராதவர்களின் பணிகளையும் சேர்த்து கவனித்தனர். அரசு பள்ளிகள் வழக்கம் போல செயல்பட்டன.
சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள எழிலகம் வளாகத்தில் நேற்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எழிலகம் வளாகத்தில் செயல்படும் நில நிர்வாகம், பின்தங்கிய மக்கள் நல நிர்வாகம், மாநில திட்டமிடல் கமிஷன், வணிக வரி, உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, வருவாய் நிர்வாக ஆணையம், தேசிய தகவல் மையம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை, சமூக நலம் - மறுவாழ்வுத்துறை உள்பட 15 துறைகளின்கீழ் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 300 பேர் பங்கேற்றனர்.
இதனைத்தொடர்ந்து எழிலக வளாகத்திலேயே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பேரணியாக சென்றனர். பின்னர் எழிலக வாசல்களில் போலீசாரால் போடப்பட்டிருந்த தடுப்புகளை தகர்த்து எறிந்து, மெரினா காமராஜர் சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் தீவிரமானார்கள். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 300 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
சாலை மறியல் போராட்டத்தால் மெரினா காமராஜர் சாலையில் 25 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.