பள்ளிச் சீருடையில் வந்து பாடம் நடத்தும் தலைமை ஆசிரியர்!
கல்வியை மட்டுமல்ல கலாசாரத்தையும், பண்பாட்டையும், ஒழுக்கங்களையும் கற்றுத்தரக்கூடிய, பசுமரத்தில் ஆணிபோலப் பதிக்கக்கூடிய இடம் பள்ளி. இங்குதான் ஏழை பணக்காரன் என்ற பேதமில்லாமல் ஒரே இடத்தில் அமரச்செய்து பாடம் கற்பிக்கப்படுகின்றது. இதை மேலும் சிறப்பிக்கும் விதமாக மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே வேறுபாடு இருக்கக் கூடாது என்பதற்காகக் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் பள்ளிச் சீருடையில் வருகிறார். இது ஒரு படி அதிகமாகத் தெரிந்தாலும் பல ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக இருப்பது என்ற வகையில் வரவேற்கத்தக்கது. எப்படி இந்த எண்ணம் தோன்றியது என்று அவரிடம் கேட்டபோது, அவர் பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
“எனது சொந்த ஊர் கடப்பேரி. 3 வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு இடதுகால் ஊனம் அடைந்தேன். என் பெற்றோர் என்னை ஊனம் என்று விட்டுவிடாமல் படிக்க வைத்தனர். நான் சட்டம் படித்து வக்கீலாக விரும்பினேன். ஆனால், பாதை மாறியது. திருவள்ளூர் மாவட்டம் திருவூர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு அஞ்சல்வழியில் B.Litt தமிழ் இலக்கியம் படித்தேன். 2002ல் அரசுப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகச் சேர்ந்து பணியாற்றி வந்தநிலையில் 2012ம் ஆண்டு அரசு மதூர் ஆரம்பப்பள்ளிக்கு தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றேன்” என்று தன்னைப்பற்றிய விவரங்களோடு ஆரம்பித்தார் ஸ்ரீதர்.
‘‘நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே ‘அறிவொளி இயக்கத்தில்’ சேர்ந்து பணியாற்றினேன். அப்போது ஏழை மாணவர்களுக்கு உடைகளை வாங்கித் தருவேன். எனது பிறந்தநாளை நான் கொண்டாடுவது இல்லை. அதற்குப் பதிலாக அன்றைய தினம் மரக்கன்றுகள் கொடுப்பது, கஷ்டப்படும் விடுதி மாணவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுப்பது போன்ற செயல்களைச் செய்து சந்தோஷப்படுவேன். மாற்றுத்திறனாளியான எனக்கு எதையாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் உண்டு. அதனால், மக்களுக்கு உதவும் வகையில் எதையாவது செய்துகொண்டே இருப்பேன்.
இந்த நிலையில் எனது அண்ணன் திருமணமும், பிறகு அக்கா திருமணமும் நடந்தது. ஆனால், எனக்குப் பெண் கொடுக்க யாரும் முன்வராத பட்சத்தில் (ஊனம் காரணம் காட்டி) காஞ்சிபுரம் அருகில் ஆதவப்பாக்கம் என்ற ஊரைச் சேர்ந்த சரஸ்வதி என்பவர் 2015ஆம் ஆண்டு எனக்கு வாழ்க்கை கொடுக்க முன்வந்தார். திருமணமும் இனிதே முடிந்தது. என்னுடைய திருமண விழா முற்றிலும் வித்தியாசமானது. பார்வையற்றோர் நாட்டுப்புற இசை நிகழ்ச்சி, பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சியோடு 2000 மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. மேலும் அறிவியல் அறிஞர்கள், தத்துவ மேதைகள், வரலாற்றில் இடம்பெற்ற உலகத் தலைவர்கள், கல்வியாளர்கள் பொன்மொழிப் போன்றவை என்னுடைய திருமணத்தின் வரவேற்புப் பதாகைகளாக வைக்கப்பட்டன” என்று ஒவ்வொரு விஷயத்தையும் வார்த்தைகளாலேயே காட்சிப்படுத்தினார்.
ஒரு இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்த தர், “என்னைப்போல் யாரும் ஊனம் அடையக்கூடாது என்பதற்காக போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வாடகை ஆட்டோ மூலம் பிரசாரம் செய்துவருகிறேன். இதை எனது அண்ணன் திருமண விழாவில் 2003ஆம் ஆண்டு தொடங்கினேன். இன்றுவரை தொடர்ந்து செய்து வருகிறேன். அதுமட்டு மல்லாமல் எங்கள் இல்லத் திருமணங்களில் சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க மரக்கன்று கொடுத்துவருகிறேன். அறிவியல் இயக்கம் மற்றும் மாற்றுத்திறனாளி சங்கம், எழுத்தாளர் சங்கம் ஆகியவை மூலம் கல்விப்பணி - சமூகசேவை செய்துவருகின்றேன்.
கல்வித்தந்தை காமராசர் கல்விக்காக எவ்வளவோ செய்துள்ளார். மதிய உணவுத்திட்டத்தைக் கொண்டு வந்ததால்தான் இன்றைக்கு நிறையபேரால் கல்வியே கற்க முடிந்தது. அவர் மாணவச் செல்வங்களோடு நெருங்கிப் பழகியவர். அவரது பிறந்தநாளான 15.7.2017 அன்று மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வித்தியாசம் இருக்கக்கூடாது என்பதற்காக ஒரே சீருடை அணிய வேண்டும்போல் தோன்றியது. அதனால் அன்று முதல் அணியத் தொடங்கினேன். இதை அணிந்தபிறகு மாணவர்கள் என்னோடு வேற்றுமையின்றிப் பழகுகின்றனர்; சந்தேகங்களைக் கேட்கின்றனர்; சக தோழனாக நினைத்துப் பழகுகின்றனர். எனக்கும் கல்வி கற்றுக் கொடுப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது.
இந்தச் செயலுக்குப் பொதுமக்களும், அதிகாரிகளும் பாராட்டுத் தெரிவித்தனர். தரமான கல்வி கொடுக்க வேண்டும் என்பதே எனது ஆசை. எங்கள் ஊர் அருகே தனியார் ஆங்கிலப் பள்ளி உள்ளது. அதற்கு இணையாக மாணவர்களைத் தரம் உயர்த்த ஸ்மார்ட் வகுப்பறையும், கணினி அறையும், சில தளவாடப்பொருட்களும் தேவைப்படுகிறது. இவற்றை எப்படியாவது பெற்றுத்தந்து எல்லோரும் வியக்கும் வகையில் சிறந்த பள்ளியாக மாற்ற முயற்சிசெய்து கொண்டுவருகிறேன். வெற்றியும் பெற்றுவிடுவேன் என நம்பிக்கை உள்ளது” என முத்தாய்ப்பாக முடித்தார். மாணவச் செல்வங்களை மகத்தானவர்களாக்க அடிப்படைத் தேவையான கல்விக்கூடத்தின் தரத்தை உயர்த்த நினைக்கும் நல்லுள்ளம் கொண்ட தலைமையாசிரியரின் செயல் சிறக்க நாமும் வாழ்த்துவோம்.
நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி